ICC World Cup Final NZ vs ENG Preview: நீங்கள் மெகா பலத்தோடு வந்தாலும், நியூசி.,யை சாதாரணமாக வீழ்த்த முடியாது!

NZ Vs ENG World Cup Finals Preview : பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஜோடி 'நீ யாரா இருந்தாலும், எவனா இருந்தாலும் எனக்கு...

Unpredictable Matches From Unpredictable Weather Conditions என்று 2019 உலகக் கோப்பை தொடரை நாம் வர்ணிக்கலாம். 500 அடிக்கும், 600 அடிக்கும் என்று பந்தயம் கட்டப்பட்ட அணி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்குள் நாக்குத் தள்ளி போனதையும் பார்த்தோம்… ஒவ்வொரு மேட்சின் போதும், கணிக்க முடியாத வானிலைக்கு மத்தியில் சிக்கி, அணிகள் அல்லாடியதையும் பார்த்தோம். இந்தியாவின் அரையிறுதி வெளியேற்றத்தில் வானிலையும் ஒரு பங்கு வகித்ததை யாராலும் மறுக்க முடியாது. ‘மழை பெய்யுற இங்கிலாந்துல எதுக்குயா வேர்ல்டு கப்பு வச்சீங்க?’-னு கேட்டா, ‘இது இங்கிலாந்துல வெயில் காலம் Bro’-னு அப்பாவியாய் பதில் சொல்லுகிறது ICC.

அப்படிப்பட்ட அபாரமான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் கணிக்கவே முடியாத நியூசிலாந்து அணியும், கணித்தாலும் தெளிவாக சொதப்பும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.

நியூசிலாந்தை பொறுத்தவரை, அந்த அணியின் பலம் என்றால்,

மிடில் ஆர்டர்,

பவுலிங்

அவ்வளவு தான். அவ்வளவே தான்.

இந்த உலகக் கோப்பையிலேயே மிக மிக மோசமான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ரெக்கார்ட் வைத்திருக்கும் அணி என்றால், அது நியூசிலாந்து மட்டுமே. அனைத்துப் போட்டியிலும், முதல் மூன்று ஓவருக்குள்ளாகவே, நியூசிலாந்தின் ஒன் டவுன் பேட்ஸ்மேன் களமிறங்கி விடுவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியா எப்படி ரோஹித் ஷர்மா, விராட் கோலி எனும் இரு பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டு, இந்த உலகக் கோப்பையில் காலம் தள்ளியதோ, டிட்டோ அதேபோல் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் எனும் இரு பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டே நியூசிலாந்து தனது Biceps-ஐ இதுவரை காட்டி வந்திருக்கிறது.

இந்திய அணியிலாவது தோனி எனும் புண்ணியவான் லோ ஆர்டரில் இறங்கி, அவரால் முடிந்த உதவியை செய்துக் கொண்டிருந்தார். ஆனால், நியூஸி., அணியில் அதற்கும் வழியில்லாமல் இருக்கிறது. டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் அணி நிர்வாகம் என்ன எதிர்பார்த்ததோ, அதை இதுவரை செய்யவில்லை.

ஆனால், பவுலிங் அவர்களது பலம். அது பேஸ் ஆகட்டும், ஸ்பின் ஆகட்டும், இரண்டிலும் We are Confident Buddies என்று உரக்கச் சொல்கிறது நியூசிலாந்து. ட்ரென்ட் போல்ட், மேட் ஹென்றி, மிட்சல் சான்ட்னர் என்று சூழலுக்கு ஏற்ப Beamer, Bumper, Cutter, Bite என்று கலந்து கட்டி வீசும் அளவுக்கு நுண்ணறிவு பெற்ற பவுலர்கள் அங்கு இருக்கின்றனர். இவர்களது பலமே, தங்களை சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வது தான். உண்மையில், இங்கிலாந்துக்கு இது மாபெரும் சவாலாக இருக்கும்.

இங்கிலாந்து

1992க்குப் பிறகு, உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து.

நியூசிலாந்து – ‘ப்ரோ… ஒரேயொரு முறை நாங்க வேர்ல்டு கப்பு ஜெயிச்சிக்குறோம் ப்ரோ’ என்று ஏக்கமாக கேட்டால்,

டேய்… கிரிகெட்டை கண்டுபிடிச்ச நாங்களே இன்னும் வேர்ல்டு கப் வின் பண்ணதில்ல டா ‘ என்று கண்களில் கசியும் வியர்வையை துடைத்துக் கொண்டே கெத்தாக பதில் சொல்கிறது இங்கிலாந்து.

இங்கிலாந்தை பொறுத்தவரை பலம் என்று பார்த்தால், Hercules-ன் புஜத்தோடு அதனை ஒப்பிடலாம். அந்த புஜபலம் அவர்களது பேட்டிங்.

டெஸ்ட்ராயிங் ஓப்பனிங்,

வெல் பேலன்ஸ்டு மிடில் ஆர்டர்

டேஞ்சரஸ் லோ ஆர்டர்

என்று அவர்களது பேட்டிங்கை மூன்று வகையாக பிரிக்கலாம்.

டாஸ் போடும் போது எதிரணி கேப்டனுக்குள் இருக்கும் நம்பிக்கையையும், தேசிய கீதம் இசைக்கப்படும் போது, அந்த கேப்டனுக்குள் உருவாகும் வெறித்தனத்தையும், முதல் பந்து போடுவதற்கு முன்பு அந்த கேப்டனுக்குள் இருக்கும் உற்சாகத்தையும், முதல் 5 ஓவருக்குள்ளாகவே சுக்கு நூறாக உடைத்துவிடுகிறது ஜானி பேர்ஸ்டோ – ஜேசன் ராய் என்ற ஓப்பனிங் ஜோடி.

அதிரடியை மட்டுமில்லாமல், புத்தியையும் யூஸ் பண்ணுகிறது இந்த ஜோடி. பும்ரா மாதிரியான கணிக்க இயலாத பவுலர்களுக்கு சல்யூட் வைத்துவிட்டு, இதர அனைத்து பவுலர்களையும் சிதைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணிகளிடமும் இதே ஃபார்முலாவைத் தான் ஃபாலோ செய்து வருகிறார்கள் இவர்கள்.

மிடில் ஆர்டரில், ஜோ ரூட், இயன் மோர்கன் அணியின் கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்த, லோ ஆர்டரில் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஜோடி ‘நீ யாரா இருந்தாலும், எவனா இருந்தாலும் எனக்கு கவலையில்லை’ என்ற மோடில் எதிரணிகளை பாடு படுத்துகிறது.

சரி… அப்போ இங்கிலாந்து பேட்டிங்கில் மைனஸ் என்பதே இல்லையா? என்று கேட்டால்… சற்று ஊடுருவி பார்த்து இருக்கு என்று நம்மால் சொல்ல முடியும்.

இயன் மோர்கன் அதிரடியாக அடித்தாலும், அவரை விரைவில் அவுட் செய்வது என்பது பெரிய காரியமே அல்ல. அவர் சந்திக்கும் முதல் 10 பந்துகளையும், அவர் சந்திக்கவே முடியாத அளவுக்கு கடினமாக டெலிவரி செய்தால், 11வது பந்தில் அவர் அவுட்.

ஜோஸ் பட்லரின் டச்சில் தெரியும் அவரது கான்ஃபிடன்ட் மற்றும் ஆக்ரோஷம். ஆனால், இந்த உலகக் கோப்பையை பொறுத்தவரை, அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஆடவில்லை என்பதே உண்மை. முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசுகிறார். ஆனால், அந்த இன்னிங்சை Stretch செய்து, பெரிய ஸ்கோர்ஸ் அடிக்க தவறிவிடுகிறார். அவர் களமிறங்கும் ஸ்லாட் லோ ஆர்டர் என்பதும், பெரும்பாலும் 43வது ஓவரில் தான் களமிறங்குகிறார் என்றாலும், தன் மீதான எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை.

இங்கிலாந்து பந்துவீச்சை பொறுத்தவரை, நியூசிலாந்து கொஞ்சம் தெளிவாக சிந்தித்து செயல்பட்டால், நிச்சயம் தங்களுக்கு சாதகமான சூழலை நாளை உருவாக்கிக் கொள்ளலாம்.

ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் நீங்கள் புது பந்தை கொடுத்தாலும் சரமாரியாக வீசுவார், இரண்டாவது ஸ்பெல்லிலும் ஆக்ரோஷமாக வீசுவார், டெத் ஓவரிலும் ஸ்லோ பந்துகள், பவுன்ஸ் பந்துகள் என வேரியேஷனை கலந்து கட்டி அடிப்பார். எப்படிப்பார்த்தாலும், ஆர்ச்சர் மூலம், நியூசிலாந்துக்கு ஏற்படப் போகும் சேதம் தவிர்க்க முடியாதவை.

ஆனால், க்றிஸ் வோக்ஸ் New Ball-ல் சிறப்பாக பந்து வீசினாலும், டெத் ஓவர்களில் உண்மையில் அவர் ஒரு மேட்டரே இல்லை. பெரிதளவில் பேஸ் இல்லாத அவரது டெத் ஓவர்களை, லாதம், நீஷம் போன்ற ஹிட்டர்கள் வச்சு செய்யலாம்.

லியம் பிளங்கட், மார்க் வுட் போன்றோர்கள் தொல்லைகள் கொடுத்தாலும், தனது வழக்கமான பதட்டப்படாத தொனியில் நியூசிலாந்து ஆடினால் நிச்சயம் சமாளிக்கலாம். அடில் ரஷித் பொறுத்தவரை அவர் அஜந்தா மெண்டிஸ் போன்று மிகவும் டேஞ்சரான ஸ்பின்னர். ஆனால், யுவராஜும், ஷேவாக்கும் எப்படி அதே மெண்டிஸை, சரியாக கணித்து சாத்தி எடுத்தார்களோ, அப்படி அடில் ரஷித்தையும் விளாச முடியும் என்பதே அடியேனின் கருத்து.

போட்டி நடைபெறும் இடம் லண்டன் லார்ட்ஸ் என்பதால், பேஸ், ஸ்பின் என்று இரண்டு கைகளுக்கும் நாளை ஹெவி டியூட்டி இருக்கும். டாஸ் வெல்லும் அணியே முதலில் பேட்டிங் செய்ய விரும்பும். அது நியூசிலாந்தாக இருக்கும் பட்சத்தில், அவர்களின் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

இரு அணிகளின் பலத்தை கொண்டு கணக்கீடு செய்தால், நிச்சயம் இங்கிலாந்து கைகளில் தான் உலகக் கோப்பை தவழும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், நாம் முதல் பத்தியில் சொன்ன, Unpredictable Matches From Unpredictable Weather Conditions என்ற யதார்த்த கள நிலவரத்தை கொண்டு பார்த்தால், நாளை இரு அணிக்கும் ஒரு மெகா போராட்டம் காத்திருக்கிறது என்பதே உண்மை. நிச்சயம், ஒன் சைட் கேமாக இது இருக்காது என்பதை உறுதியாக கூறலாம்!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close