ANBARASAN GNANAMANI
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, தனது முதல் இன்னிங்சில் 58 ரன்னில் சுருண்டு ஒரு மோசமான சாதனையை நிகழ்த்துவதில் இருந்து தப்பித்துள்ளது.
58 ரன்னில் சுருண்டதே மோசம்... அதைவிட வேறு என்ன மோசம் என்ன இருக்கப் போகிறது என்று கேட்கிறீர்களா? சொல்றேன்...
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பகல்-இரவாக ஆக்லாந்தில் இன்று தொடங்கியது.
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்று இங்கிலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தார். பிட்ச் பற்றிய தன்மை அறிந்து உள்நோக்கத்துடன் தான் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், 'நாங்களே முதலில் பேட் செய்ய வேண்டும் என்று தான் விரும்பினோம்' என்று கூற, 'என்னடா இது! இரண்டு பேரும் எதிர் எதிரா பிட்சை ரீட் செய்து வச்சு இருக்காங்களே' என்று நமக்கே குழப்பமாக இருந்தது. ஆனால், உண்மையில் ஆக்லாந்தில் இன்று பகலில் நல்ல வெளிச்சம் இருந்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் 90 சதவிகிதம் மழை பெய்யும் என்பதே ரிப்போர்ட் சொல்லும் சங்கதி.
இந்த நிலையில், பேட்டிங் செய்ய தயாராக இருந்த இங்கிலாந்து அணியில் ‘ஆல்ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றார். (கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயம் இது குஷியான செய்தி தான்). 7 மாதங்களுக்கு பிறகு அவருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், களமிறங்கிய இங்கிலாந்து, நியூஸி.,யின் ஆக்ரோஷ பந்துவீச்சில் நிலை குலைந்தது. 11 பேட்ஸ்மேன்களில் 2 பேர் மட்டுமே, இரட்டை இலக்கத்தை தொட்டனர். கேப்டன் ரூட் உட்பட ஐந்து பேர் '0'-வில் வெளியேறினர்.
நியூஸியின் பிரதான ஃபேஸ் பவுலர்கள் போல்ட் மற்றும் டிம் சவுதி ஆகிய இருவரும் 'நாங்களே போதும்' என்ற ரீதியில் 'தி கிரேட் பிரிட்டன்'-ஐ 58 ரன்னில் சுருட்டிவிட்டனர்.
போல்ட் - 6 விக்கெட்டுகள்
சவுதி - 4 விக்கெட்டுகள்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசி அணி, தற்போது வரை 57 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.
அதுசரி! அந்த படுமோசமான சாதனை என்ன என்று தானே கேட்குறீங்க?
இந்த ஸ்கோர் இங்கிலாந்து அணியின் 6-வது குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு, 1887ம் ஆண்டு இங்கிலாந்து அணி 45 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது. 1955ம் ஆண்டு, 26 ரன்னில் நியூசிலாந்து அணி சுருண்டு இருந்ததே டெஸ்டில் அரங்கில் ஒரு அணியின் குறைந்தபட்ச இன்னிங்ஸ் ஸ்கோராகும். இன்றைய போட்டியின் போது, 27-9 என்ற நிலையில் இருந்தது இங்கிலாந்து. இறுதிக் கட்டத்தில் கிரெய்க் ஓவர்டன், 25 பந்தில் 33 ரன்கள் எடுத்ததால், இரண்டாவது மோசமான டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோரை படைக்கும் கண்டத்தில் இருந்து இங்கிலாந்து தப்பியது. ஜஸ்ட் மிஸ்ஸு!!
அதுமட்டுமின்றி, இதற்கு முன்னதாக, இங்கிலாந்து பவுலிங் கூட்டணி படைத்த சாதனையையும், நியூசி பவுலிங் கூட்டணி தகர்த்து கெத்து காட்டியுள்ளது.
வரலாற்றை ஒருமுறை திரும்பிப் பார்த்தோம்னா...
அதாவது, 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில், 2 பவுலர்கள் சேர்ந்து எதிரணியை ஆல் அவுட் செய்த 'சம்பவம்' ஒருமுறை மட்டுமே நிகழ்ந்து இருந்தது.
2013ம் ஆண்டு, இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூட்டணி, லார்ட்ஸில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 22.3 ஓவரில் 68 ரன்களுக்கு எதிரணியை சுருட்டியது.
தற்போது ஐந்து வருடங்கள் கழித்து, போல்ட் மற்றும் சவுதி கூட்டணி இணைந்து, அதே இங்கிலாந்து அணியை 20.4 ஓவரில் 58 ரன்களுக்கு சுருட்டி 'தரமான சம்பவத்தை' நிகழ்த்தியுள்ளது.
'வாழ்க்கை ஒரு வட்டம்' என்பது இதுதானோ!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.