scorecardresearch

பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு காலோடு கூட விளையாடுவேன்! தோனி ஏன் அப்படி கூறினார் தெரியுமா?

‘எனக்கு ஒரு காலே போய்விட்டாலும், நான் அப்போதும் பாகிஸ்தானிற்கு எதிராக விளையாடுவேன்’ என்றார் தோனி.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தோனி குறித்த ரகசியம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட எம்எஸ்கே பிரசாத், அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது, “கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஒரு இரவு பொழுதில் ஜிம்மில் பயிற்சி செய்துக் கொண்டிருந்த தோனி பளுதூக்கும் கருவியைத் தூக்கும்போது, திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், நிலைத்தவறி அந்த பளுதூக்கும் கருவியோடு கீழே விழுந்தார். நல்லவேளை அவர் மீது அந்த கருவி விழவில்லை. இதனால், தோனியால் நகரவே முடியவில்லை. ஊர்ந்து வந்து எச்சரிக்கை மணியை அடித்தார். உடனடியாக வந்த மருத்துவக் குழு அவரை ஸ்ட்ரெட்சரில் தூக்கி வைத்து கொண்டுச் சென்றனர்.

இதன்பின் நான் டாக்கா சென்றவுடன், பத்திரிக்கையாளர்கள் தோனி குறித்து கேள்விக் கேட்டனர். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அடுத்த சில நாட்களில், பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டி நடைபெற இருந்தது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் அவரது நிலை குறித்து அறிய அவரிடம் சென்று பேசிய போது ‘கவலை வேண்டாம் எம்எஸ்கே அண்ணா’ என்றார். பத்திரிக்கையாளர்களிடம் என்ன சொல்ல வேண்டும்? என கேட்டதற்கும் ‘கவலை வேண்டாம் அண்ணா’ என்றார். மாற்று வீரரை வரவழைக்கட்டுமா? என்று கேட்டதற்கும் ‘கவலை வேண்டாம்’ என்று மீண்டும் மீண்டும் அதே பதிலையே கூறினார்.

மறுநாள் காலை நான் தோனி அறைக்கு சென்ற போதும் அவர், ‘கவலை வேண்டாம்’ என்றார். நான் நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்தேன். தோனியின் ஆறுதல் வார்த்தைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால், தலைமை தேர்வுக் குழுத் தலைவர் சந்தீப் பாட்டீலை நான் உடனடியாக தொடர்பு கொண்டு நிலைமை குறித்து விளக்கினேன்.
ஆசியக் கோப்பை விதிகளின்படி 24 மணி நேரத்துக்கு முன்பு அணி வீரர்களை அறிவிக்க வேண்டும். எனவே, வேறு வழியில்லாமல் தோனிக்குப் பதிலாக பார்த்தீவ் பட்டேலை வரவைத்தோம். அன்று மாலையே அவர் அணியுடன் இணைந்துகொண்டார்.

அன்று இரவு 11 மணி அளவில், நான் தோனியின் அறைக்கு மீண்டும் சென்றேன். அறையில் அவர் இல்லை. அப்போது எதேச்சையாக நான் மேல் மாடிக்கு சென்று பார்த்த போது, அவர் நீச்சல் குளத்தை நோக்கி நடக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தார். அப்போது நான், ‘நடக்கவே முடியாத இவரால் எப்படி விளையாட முடியும்?’ என்று நினைத்துக் கொண்டேன். உடனே தோனி என்னைப் பார்த்து, ‘இப்போதும் கவலை வேண்டாம். என்னிடம் சொல்லாமலேயே பார்த்தீவை அழைத்துவிட்டீர்கள். அதனால், நீங்கள் பாதுகாப்பு அடைந்துவிட்டீர்கள்’ என்றார். எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை.

போட்டி நடைபெறும் நாள் வந்தது. பேடை காலில் கட்டிக் கொண்டு அவர் பயிற்சிக்கு வந்ததைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். அன்று மதியம் அணி அறிவிக்கப்படுவதற்குள் தோனி முழுமையாக அந்த போட்டிக்கு தயாராகிருந்தார். அவருடைய அறைக்கு என்னை அழைத்து, ‘நீங்கள் ஏன் அதிகம் கவலைப்படுகிறீர்கள்? எனக்கு ஒரு காலே போய்விட்டாலும், நான் அப்போதும் பாகிஸ்தானிற்கு எதிராக விளையாடுவேன்’ என்றார். அதன்படி விளையாடி, அந்த ஆட்டத்தில் அணியை வெற்றிப் பெற வைத்தார் தோனி” என்று பிரசாத் தெரிவித்தார்.

தோனி குறித்து எம்எஸ்கே அளித்த பேட்டி தான் இப்போது வைரலாகி வருகிறது. தோனி இப்படி கூறியதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஏனெனில், அவரது எண்ணம் அப்படி. அவர் அடிக்கடி ஒரு விஷயம் கூறுவதுண்டு. ‘தனிநபர் சாதனையை விட, இறுதியில் அணியின் வெற்றியே முக்கியம்’ என்று. கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டும், ‘இவர் இனியும் அணிக்கு தேவையா?’ பல மூத்த முன்னாள் வீரர்கள் விமர்சித்தும், இன்று வரை தோனி அணியில் அடம் பிடித்துக் கொண்டு நீடிப்பது, தன் மேல் உள்ள நம்பிக்கையும், இந்திய அணி தோற்கக் கூடாது என்ற வெறியும் தான் காரணம். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டை காதலித்தார் என்றால், தோனி ‘இந்திய அணி வெற்றி’ என்ற வார்த்தையை மட்டும் தான் அதிகம் காதலிக்கிறார்.

பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, உலகின் எந்த அணிக்கும் எதிராக ஒற்றைக் காலோடு ஆடுவார் என்றுமே இந்த ‘தோற்காத தோனி’.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Even if my one leg is not there i will still play against pakistan ms dhoni told msk prasad