பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் சமான், ஒருநாள் போட்டியில் முதன் முதலாக இரட்டை சதம் விளாசி சாதனை புரிந்துள்ளார்.
ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. முதல் மூன்று போட்டியிலும் வென்று தொடரை ஏற்கனவே வென்றுவிட்ட பாகிஸ்தான், இன்று நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில், 1 விக்கெட்டை மட்டும் இழந்து 399 ரன்கள் குவித்துள்ளது.
தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் - ஃபக்கர் சமான், முதல் விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தனர். இமாம் 113 ரன்னில் அவுட்டாக, தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஃபக்கர் சமான், பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஒருநாள் இரட்டை சதத்தை விளாசினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஃபக்கர், 156 பந்தில் 210 ரன்கள் குவித்தார். இதில் 24 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும்.
இதற்கு முன்னதாக, 1997ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் வீரர் சயீத் வீரர் 194 ரன்கள் அடித்திருந்ததே, பாகிஸ்தான் வீரர் ஒருவரின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோராக இருந்தது. 21 ஆண்டுகள் கழித்து, ஃபக்கர் சமான் அதனை முறியடித்து, புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் - ஃபக்கர் சமான் 304 ரன்கள் குவித்ததன் மூலம், ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவித்த தொடக்க ஜோடி என்ற சாதனையையும் பாகிஸ்தான் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக, இலங்கையின் ஜெயசூர்யா- உபுல் தரங்கா ஜோடி, இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் 284 ரன்கள் குவித்து இருந்ததே, தொடக்க ஜோடி ஒன்றின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை, 2001ம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக சச்சின், கங்குலி அடித்த 258 ரன்களே இதுவரை சிறந்த ஒப்பனிங் பார்ட்னர்ஷிப்பாக உள்ளது.