Indian Cricket Team: 'டெஸ்ட்' என்கிற ஆங்கில வார்த்தை லத்தீன் வார்த்தையான 'டெஸ்டம்' என்பதிலிருந்து வந்தது. இதற்கு இணையான தமிழ் வார்த்தை 'சோதனை' என்பதாகும். இதனை கிரிக்கெட்டுடன் பொருத்திப் பார்க்கையில், ஒரு வீரரின் திறனை சோதிக்கும் வடிவமாக (ஃபார்மெட்) டெஸ்ட் கிரிக்கெட் பார்க்கப்படுகிறது.
இந்த வடிவத்தில் ஒரு கிரிக்கெட் வீரர் சிறப்பாக செயல்பட, தான் கற்ற அனைத்து வித்தைகளையும் கட்டவிழ்த்து விட வேண்டும். அத்துடன், கிரிக்கெட்டின் மற்ற வடிவத்தை காட்டிலும், இந்த வடிவத்தில் ஜொலிக்கும் வீரர் அனைவரின் கவனத்தையும் எளிதில் ஈர்த்து விடலாம். அதனால்தான், எந்தவொரு கிரிக்கெட் வீரரும் தனது வாழ்க்கையில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது நாட்டின் அணிக்காக களமாடி விட வேண்டும் என்கிற லட்சியத்துடன் இருப்பார்கள்.
பல ஆண்டுகளாக பல நம்பமுடியாத அறிமுகங்களை டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு கண்டுள்ளது, ஆனால் பலரால் அவர்களின் ஈர்க்கக்கூடிய ஓட்டங்களை நீண்ட காலத்திற்கு தொடர முடியவில்லை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கூட, தங்கள் அறிமுக போட்டி அல்லது தொடரில் சதம் அடித்த வீரர்கள் உள்ளனர். ஆனால் அந்த வேகத்தை முன்னோக்கி கொண்டு செல்வது மற்றொரு பெரிய சவாலாக இருக்கிறது. அவ்வகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய இந்திய வீரர்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
5. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் – 23 இன்னிங்ஸ்
முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு நீண்ட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இல்லை. ஆனால் அவர் நிச்சயமாக சிறப்பான தொடக்கத்தை கொண்டிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது முதல் டெஸ்டில் அவர் 5 மற்றும் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் அதன் பிறகு வேகம் எடுத்த மஞ்ச்ரேகர் தனது 23வது இன்னிங்ஸில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்தார்.
ஒட்டுமொத்தமாக, அவர் 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 37.14 சராசரியில் 4 சதங்கள் மற்றும் 9 அரை சதங்களுடன் 2043 ரன்கள் எடுத்துள்ளார்.
4. சுனில் கவாஸ்கர் – 21 இன்னிங்ஸ்
இந்திய ஜாம்பவான் வீரரான சுனில் கவாஸ்கருக்கு அறிமுகம் தேவையில்லை. உண்மையில், பல இந்திய இளைஞர்கள் கையில் பேட்டை எடுக்க காரண கர்த்தாவாக இருந்தார். ஹெல்மெட் இல்லாத கடுமையான வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக, அவர் 1971 இல் அறிமுகமானார்.
அந்த ஆட்டத்தில் 65 மற்றும் 67 ரன்களை எடுத்தார். அவர் தனது முன்னோக்கி எடுத்துச் சென்ற அவர் 21 இன்னிங்ஸில் 1000 ரன்களை எட்டினார். மேலும், கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த முதல் பேட்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவர் 34 சதங்கள் மற்றும் 45 அரைசதங்கள் உட்பட 51.12 சராசரியில் 10122 ரன்களுடன் ஓய்வு பெற்றார்.
3. மயங்க் அகர்வால் – 19 இன்னிங்ஸ்
ஆஸ்திரேலிய வேகத் தாக்குதலுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த ஆட்டத்தில் அறிமுகமானார் மயங்க் அகர்வால். அந்தப் போட்டியில் 76 மற்றும் 42 ரன்கள் எடுத்தார். அவர் தனது முதல் பத்து டெஸ்டில் இரண்டு இரட்டை சதங்களை அடித்து மிரட்டினார். அதன்பிறகு, 1000 ரன்களை கடக்க வெறும் 19 இன்னிங்ஸ்களை மட்டுமே எடுத்தார். 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி வாகை சூடிய டெஸ்ட் தொடரில் இந்தியாவின் முக்கி வீரராகவும் அவர் இருந்தார்.
2. சேதேஷ்வர் புஜாரா – 18 இன்னிங்ஸ்
ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு, எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் சேதேஷ்வர் புஜாரா. பந்துவீச்சாளர்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கும் அதேவேளையில், அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து திணறடிக்க செய்பவர். பல பந்துவீச்சாளர்களின் இரவு தூக்கத்தை கலைத்தவராகவும், இந்தியாவுக்கு நம்பர் 3 இடத்தில் நங்கூரமாக இருந்தார்.
இந்தியாவுக்காக நம்பமுடியாத டெஸ்ட் தொடக்கத்தைப் பெற்ற புஜாரா 1000 ரன்களை எட்ட வெறும் 18 இன்னிங்ஸ்களைத் தான் எடுத்துக் கொண்டார். இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19 சதங்கள் மற்றும் 35 அரை சதங்களுடன் 7195 ரன்கள் எடுத்துள்ளார்.
1. வினோத் காம்ப்ளி – 14 இன்னிங்ஸ்
இந்திய கிரிக்கெட் கண்ட மாபெரும் அசத்தியா வீரர்களில் முதன்மையானவர் வினோத் காம்ப்லி. நம்பமுடியாத பேட்டிங் திறமையைக் கொண்டிருந்த அவர், தனது ஆரம்ப காலத்திலே டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டவர்.
ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக் காரரான அவர் வெறும் 14 இன்னிங்ஸில் அதிவேகமாக 1000 டெஸ்ட் ரன்களை கடந்த முதல் இந்திய வீரராக இருக்கிறார். வினோத் காம்ப்ளி 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 இன்னிங்ஸில் 54.20 சராசரியில் 4 சதங்களுடன் 1084 ரன்கள் எடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.