ஆசிய மகளிர் கூடைப்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஏழு நாடுகள் பங்கேற்ற ஆசிய மகளிர் கூடைப்பந்து தொடர் போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. டிவிஷன் "பி"-யில் இடம் பெற்றிருந்த ஏழு அணிகளும் "ஏ" மற்றும் "பி" என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆசிய மகளிர் கூடைப்பந்து தொடர் போட்டியில், பிஜி தீவுகளை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதி சுற்றில் லெபனான் அணியுடன் இந்திய அணி மோதியது. முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி லெபனான் அணியை 79-69 என்ற புள்ளிக்கணக்கில் வீழத்தியது. அதேபோல், மற்றொரு அரையிறுதி போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை 51-77 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தான் அணி வீழ்த்தியது.
இத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. அதில், இந்தியா - கஜகஸ்தான் ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில், இரு அணிகளும் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடின. இரு அணிகளும் தலா 73 புள்ளிகளை சேர்த்திருந்த போது, ஆட்ட நேர முடிவில் இந்திய வீராங்கனைகள் இரண்டு புள்ளிகளை சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர். இறுதியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி, 75-73 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது.
இந்த வெற்றியின் மூலம் வருகிற 2019-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஆசிய மகளிர் கூடைப்பந்து தொடரில் டிவிஷன் "ஏ"-யில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. வெற்றியை தொடர்ந்து, இந்திய அணிக்கு கூடைப்பந்து சம்மேளனம் ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
முன்னதாக, இந்திய கூடைப்பந்து சம்மேளனத்திற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அங்கீகாரம் வழங்கி கவுரவம் அளித்தது. இதனை பலரும் வரவேற்றுள்ளனர். இந்தியாவில் கூடைப்பந்து சம்மேளனத்தை நிர்வகிப்பது தொடர்பாக இரு பிரிவுகள் இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வந்த நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கோவிந்தராஜ் தலைமையிலான சம்மேளனத்தை அங்கீகரித்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.