2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிஃபா உலககோப்பை கால்பந்து போட்டியில் ஆசியாவில் இருந்து 8 அணிகள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
உலகின் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விளையாட்டு போட்டியை எடுத்துக்கொண்டால் அதில் கால்பந்து விளையாட்டுக்கு முக்கிய இடம் உண்டு. சிறிய நாடுகள் கூட தங்கள் நாட்டின் சார்பில் கால்பந்து அணியை சர்வதேச அளவில் தரமான அணியாக வைத்துள்ளனர். ஆண்டு முழுவதும் பல்வேறு நாடுகளில் பல லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தாலும், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கால்பந்து உலககோப்பை கால்பந்து போட்டி உலகளவில் கவனத்தை ஈர்க்க தவறியதே இல்லை.
அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெற்ற பிஃபா உலககோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி கார்னர் வாய்ப்பின் மூலம் 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இதனைத் தொடர்ந்து அடுத்து 2026-ம் ஆண்டுக்கான பிஃபா உலககோப்பை தொடர் கனடா அமெரிக்கா மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
இந்தியாவும் பிஃபா உலககோப்பை தொடரும்
ஆசியாவின் சிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாக இருந்து வரும் இந்தியா, 1950-60 களில் தலைசிறந்த அணியாக விளங்கியது. 1951 மற்றும் 1962-ல் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி, 1956-ம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடத்தை பிடித்திருந்தது. அதேபோல் 1950-ம் ஆண்டு இந்திய அணி முதல்முறையாக பிஃபா உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
ஆனால் இந்திய அணி இடம் பெற்றிருந்த தகுதிக்குழுவில் இருந்த அனைத்து நாடுகளும் பின்வாங்கியதால், போட்டி தொடங்கும் முன்பே இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது. அதன்பிறகு இந்திய அணி ஆசிய அளவில் பல்வேறு கால்பந்து தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தாலும், கடந்த 73 ஆண்டுகளாக இந்திய அணியில் பிஃபா உலககோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் கனவு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.
பிஃபா உலககோப்பை கால்பந்து 2026 – ஆசிய அணிகளுக்கு வாய்ப்பு
கடந்த 2022-ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலககோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதனைத் தொடர்ந்து தற்போது 2026-ம் ஆண்டுக்கான பிஃபா உலககோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த போட்டி தொடருக்கு ஆசியாவில் இருந்து 8 அணிகள் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. 5 சுற்றுகள் அடங்கிய இந்த தகுதிச்சுற்று போட்டியில் முதல் 2 சுற்றுகள் 2027-ம் ஆண்டு நடைபெறும் ஆசியகோப்பை கால்பந்து தொடருக்காகவும், அடுத்த 3 சுற்றுகள் பிஃபா உலககோப்பை தொடருக்கான சுற்றாகவும் இருக்கும். இதில் பிஃபா அமைப்பில் உறுப்பினராக இல்லாத வடக்கு மரியானா தீவுகள் அணி ஆசியகோப்பை தகுதிச்சுற்றில் மட்டும் விளையாட உள்ளது.
ஆசியாவில் இருந்து 36 அணிகள் தகுதி பெற்றுள்ள இந்த உலககோப்பை கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்திய அணி குருப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் கத்தார் குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளனர். இதில் குவைத் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தியா - குவைத் அணியுடன் வெற்றி – கத்தார் அணியுடன் தோல்வி
குவைத் சிட்டியில் ஜாபர் அல் அஹ்மத் மைதானத்தில் நவம்பர் 16-ந் தேதி நடைபெற்ற இந்த போட்டியில், இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டியதால், ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த கோலும் விழவில்லை. அதனைத் தொடர்ந்து தொடங்கிய 2-வது பாதி ஆட்டத்திலும் இதே நிலை நீடித்ததால் இந்த போட்டி 0-0 என்ற கணக்கில் டிரா என்ற முடிவை நோக்கி நகர்ந்தாலும், இறுதிக்கட்டத்தில் 75-வது நிமிடத்தில் இந்திய அணியின் மன்வீர் சிங் கோல் அடித்து இந்திய அணியை முன்னிலை பெற வைத்தார். அதன்பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து இந்தியாவின் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற நேற்று முன்தினம் (நவம்பர் 21) நடைபெற்ற கத்தார் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. தனது முதல் போட்டியில் 8-1 என்ற கோல் கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய நடப்பு ஆசிய சாம்பியனான கத்தார் அணி, 2-வது வெற்றியை நோக்கி இந்த போட்டியில் களமிறங்கியது. 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கத்தார் அணியின் கோலை தடுக்க இந்திய அணி தீவிரம் காட்டியது.
அதே சமயம் கத்தார் அணியின் வீரர்கள் இந்திய அணியின் தடுப்பை உடைத்து கோல் அடித்தனர். 43 மற்றும் 46 நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்த கத்தார் அணி, இறுதியில் 86-வது நிமிடத்தில் 3-வது கோலை அடித்தது. இதற்கு பதில் கோல் திருப்ப இந்திய அணி மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் நடக்காததால் இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து. தற்போது இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்றுள்ளது.
அதேபோல் குவைத் அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற கத்தார் அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வெற்றிகணக்கை தொடங்காத ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் இந்தியா அணிகள் மோதும் 2-வது சுற்றின் கடைசி போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 21-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசியகோப்பை தகுதிச்சுற்றின் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.