இப்ப அடிடா பார்க்கலாம்... புனேவிற்கு மும்பை சவால்!

மூன்றாவது முறையாக புனேவை சந்திக்கும் மும்பை அணி, இப்போட்டியில் நிச்சயம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும்

மும்பை இந்தியன்ஸ் அணியைத் தவிர, ஏகப்பட்ட போராட்டத்திற்கு பின் புனே, கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் முதல் இடத்தில் மும்பை அணியும், 2-ஆம் இடத்தில் புனே அணியும், 3-ஆம் இடத்தில் ஹைதராபாத்தும், 4-வது இடத்தில் கொல்கத்தாவும் உள்ளன.

இந்நிலையில், இன்று முதல் பிளேஆஃப் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு தொடங்குகிறது. ‘குவாலிஃபையர் 1’ என்றழைக்கப்படும் இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், புனே சூப்பர் ஜெயண்ட் அணியும் மோதுகின்றன. இந்த ஐபிஎல் தொடரில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே மும்பை தோற்றுள்ளது. ஆனால், அதில் இரண்டு தோல்வி புனேவிடம் வாங்கியதாகும். இதனால், மீண்டும் மூன்றாவது முறையாக புனேவை சந்திக்கும் மும்பை அணி, இப்போட்டியில் நிச்சயம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் என தெரிகிறது.

இந்தப் போட்டியில் எந்த அணி தோற்கிறதோ அந்த அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது நமக்கு தெரிந்ததே. தோற்கும் அணி, பெங்களூருவில் நாளை நடக்கும் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் இடையேயான ஆட்டத்தில் வெல்லும் அணியை மீண்டும் சந்திக்கும். இது ‘குவாலிஃபையர் 2’ ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது.

எனவே, இன்றைய ‘குவாலிஃபையர் 1’ போட்டியில் தோற்று, மீண்டும் மற்றொரு அணியுடன் மல்லுக்கட்டுவதை விட, இதில் வெற்றிப் பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லவே இரு அணிகளும் போராடும் என்பதால், ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

ஆனால், புனே அணியின் பலமாக விளங்கிய இம்ரான் தாஹிர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவருமே தங்கள் நாட்டு அணிக்காக சர்வதேச போட்டியில் ஆட சென்றுவிட்டார்கள். இதனால் ஸ்மித், திரிபாதி, உனட்கட், மனோஜ் திவாரி ஆகியோரையே புனே அணி பெரிதாக நம்பியுள்ளது.

தோனி அணியில் இருப்பது புனேவிற்கு பெரிய பலம் தான். அவர் ஐபிஎல்-ல் இதுவரை ஒட்டுமொத்தமாக 17 பிளேஆஃப் ஆட்டங்களில் ஆடிய அனுபவம் பெற்றவரே. நிச்சயம் இந்த அனுபவம், இதுபோன்ற முக்கிய ஆட்டங்களில் அணிக்கு கைக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், தோனியும் சிறப்பாக ஆடும் பட்சத்தில், நிச்சயம் புனே வெற்றிப் பெறுவது உறுதி.

×Close
×Close