Advertisment

இந்தியா நம்பிய 5 இளம் வீரர்கள்: ஓஹோன்னு வந்தாங்க… அப்புறம் என்ன ஆனாங்க?!

Young cricketers who got axed from the Indian Team Tamil News: ஆரம்ப கட்டத்தில் மிரட்டி எடுக்கும் சில இந்திய இளம் வீரர்கள் நாளடைவில் தங்களின் சுமாரான ஆட்டத்தால் அணியிலிருந்து விலக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

author-image
Martin Jeyaraj
Aug 17, 2022 16:45 IST
New Update
Five promising young indian player, now axed from team Tamil News

promising Indian young cricketers who disappeared from the game Tamil News

Cricket news In tamil: கிரிக்கெட் உலகின் முன்னணி விளையாட்டுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, ஐபிஎல் போன்ற லீக் தொடர்களால் அதன் வளர்ச்சி அபரிவிதமாக மாறி வருகிறது. இந்த விளையாட்டிற்கு உலகம் முழுதும் அதிகமான ரசிகர்கள் இருந்தாலும், இந்தியாவில் மட்டும் கோடிக் கணக்கானவர்கள் உள்ளார்கள். ரஷ்யாவினரிடம் எப்படி செஸ் பற்றி விளக்க முடியாதோ, அதுபோல் இந்தியர்களிடம் கிரிக்கெட் பற்றி வாய் திறக்கமுடியாது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டின் வீச்சும், தாக்கமும் இந்தியாவில் நிலைகொண்டுள்ளது.

Advertisment

இம்மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் கிரிக்கெட் வீரர், வீராங்கனையாக மாற வேண்டும் என்கிற ஆசையும் குடிகொண்டுள்ளது. அதிலும், தேசிய அணியில் களமாடி, உலக அரங்கில் ஜொலிக்க வேண்டும் என்கிற கனவும், லட்சியமும் அதிகரித்துள்ளது. ஆனால், 100 கோடிக்குமேல் மக்கள் தொகை உள்ள நாட்டில், அதற்கான போட்டி கடுமையாக இருக்கிறது. அதோடு, 11 பேர் ஆடும் இந்திய கிரிக்கெட் அணியில், ஒரு இடத்திற்கு 4 முதல் 5 பேர் போட்டிபோடுகின்றனர். இதனால், தேசிய அணியில் வாய்ப்பு கிடைப்பது பெரும் திண்டாட்டமாகவே உள்ளது.

உதாரணமாக, இந்தியாவின் உள்நாட்டு தொடரான ரஞ்சி கோப்பை போன்ற தொடர்களில் மட்டும் ஒரே சமயத்தில் 38 அணிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டி போடுகிறார்கள். இதுபோன்ற தொடர்களில் கவனம் ஈர்க்கும் வீரர்களுக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கிறது. தவிர, ஐபிஎல் போன்ற டி-20 லீக்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கும் வாய்ப்பு தேடி வருகிறது.

இப்படி ஒருபக்கம் கடும் போட்டி இருந்தாலும், மறுபக்கம் வாய்ப்புகள் வீரர்களைத் தேடி வருகின்றன. அதற்கு வீரர்களின் சிறந்த ஆட்டமும், சிறப்பான தயாரிப்பும் தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படி, தங்களின் கடின முயற்சியையும், அசத்தல் ஆட்டத்தையும் வெளிப்படுத்திய பல வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்த வீரர்கள் தங்களின் அறிமுக ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினாலும், தொடர்ந்து கொடுக்கப்படும் வாய்ப்புகளை தங்களின் சொதப்பல் ஆட்டத்தால் இழந்து விடுகின்றனர்.

அவ்வகையில், சமீப காலங்களில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த, ஆரம்ப போட்டிகளிலேயே நீண்டகாலம் விளையாடுவார்கள் என்று நம்பிக்கையை ஊட்டிய, சில இளம் வீரர்கள் நாளடைவில் சுமாரான ஆட்டத்தால் அணியிலிருந்து விலகி இருக்கின்றனர். அப்படி தங்களது திறமையை வெளிப்படுத்த தவற விட்ட வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

பிரிதிவி ஷா

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் பிரிதிவி ஷா. அதே ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அக்டோபர் 04 அன்று சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய அவர் 134 ரன்கள் குவித்தார்.

publive-image

பிரிதிவி ஷா-வின் இந்த அதிரடி ஆட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. ரசிகர்கள் இவரை குட்டி சேவாக் என்று அழைத்துக் கொண்டாடினர். இவர் சச்சின், லாரா, சேவாக் ஆகியோரின் கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி இருந்தார். மேலும் அவர் அணியின் நம்பிக்கைக்குரிய வீரராகவும் உருவெடுத்தார். ஆனால், அதன்பிறகு நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இவர் 6 இன்னிங்ஸ்சில் 102 ரன்கள் மட்டும் தான் எடுத்தார். அவரின் சொதப்பல் ஆட்டம் அவரை அணியில் கழற்றி விட வழிவகுத்தது.

எனினும், பிரிதிவி ஷா தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக, நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி அணியின் சார்பில் தொடக்க வீரராக களமாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் மற்றொரு கவனம் ஈர்க்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவருக்கான வாய்ப்பு தேடி வரும்.

வெங்கடேஷ் ஐயர்

கடந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில், இந்திய மண்ணில் தோல்வி முகம் கண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 2வது பகுதியில் முன்னணி அணியாக தனது சிறப்பான ஆட்டத்தால் மாற்றி இருந்தார் வெங்கடேஷ் ஐயர். மேலும் அந்த அணி தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேற பெரிதும் பங்காற்றி இருந்தார். அதன் தொடர்ச்சியாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.

publive-image

ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக களமாடிய வெங்கடேஷ் ஆரம்பத்தில் ஃபினிஷர் ரோலுக்கு விருப்பமான தேர்வாக இருந்தார். ஆனால் ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் மறுபிரவேசம் அவரை பின்னுக்குத் தள்ளியது. மேலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மெச்சும் படியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை.

எனினும், சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் பினிஷராக அசத்தி, தனது திறனை நிரூபித்தார். ஆனால், நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், இந்திய தேர்வாளர்கள் அவர் மீது விருப்பம் காட்டவில்லை.

ஷிவம் துபே

ஐபிஎல் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஷிவம் துபேவை 2019ல் வாங்கியது. 2021ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. தற்போது இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். டி-20 ஆட்டங்களில் இவரது சிறப்பான ஆட்டம், ஹர்திக் பாண்டியா வரிசையில் இவரும் ஒரு ஆல்-ரவுண்டராக வருவார் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனால் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு, வங்க தேச அணிக்கு எதிரான டி-20 அணியில் அறிமுகமானார்.

publive-image

ஆனால், அறிமுக ஆட்டத்திலே துபே 1 ரன்னில் அவுட்டானார். அதன்பிறகு அவர் விளையாடிய 13 போட்டிகளில் வெறும் 105 ரன்களை சேர்த்து 17.5 என்கிற சுமாரான சராசரியில் இருந்தார். பந்துவீச்சிலும் பெரிதும் சோபிக்காத அவரது எக்கனாமி 10.05 ஆக உள்ளது. குறிப்பாக, நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் ஒரே ஓவரில் 34 ரன்களை வாரி வழங்கி இருந்தார். இதனால், அவர் இந்திய அணியில் இருந்தும் கழற்றிவிடப்பட்டார். எனினும், தற்போது சென்னையில் இணைந்துள்ள அவரை, அணி நிர்வாகம் பட்டை தீட்டி வருகிறது. நடப்பு சீசனில் தனது சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அவர் ஜொலிக்கும் பட்சத்தில் அவருக்கான இந்திய அணி வாய்ப்பு உறுதி.

கலீல் அகமது

ராஜஸ்தானை சேர்ந்த இந்த வேகப்புயல், 2018ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், அவருக்கு அதே ஆண்டில் நடந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி வாய்ப்பு கிட்டியது. அவரது இடக்கை வேகப்பந்து வீச்சு அறிமுக ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை சாய்க்க உதவியது. ஆனால், தொடர்ந்து நடந்த ஆட்டங்களில் அவரது வேகமமும், உத்தியும் கணிக்கப்பட்டது.

publive-image

கலீல் அகமது டி20 கிரிக்கெட்டில் 8.83 என்ற எக்கனாமியில் பந்துவீசி இருக்கிறார். ஆனால், அவரை விட மிகத்துல்லியமாக பந்துக்களை வீசும் இடக்கை வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். குறிப்பாக, நடராஜன், அர்ஷிதீப் சிங் போன்றோரின் பந்துவீச்சு சிறப்பானதாக உள்ளது. இதனால், அணியில் இவருக்கான தேவை இல்லாமல் போய்விட்டது.

நவ்தீப் சைனி

உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் தனது அதிரடியான வேகத்தில் பந்துகளை வீசி மிரட்டி வந்த சைனிக்கு இந்திய அணியில் கடந்த 2019ம் ஆண்டில் அறிமுகம் கிடைத்தது. அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற இவர் 2 டெஸ்டில் 4 விக்கெட்டுகளையும் 6 ஒருநாள் போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்.

publive-image

தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த தொடரின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் மீண்டு வந்த இடைவெளியில், பல இளம் வீரர்கள் அவரது இடத்தை பிடித்துவிட்டனர். ஐபிஎல் தொடரிலும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறி வருகிறார். தற்போது அவர் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் இணைந்துள்ள நிலையில், அவரின் பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்தி வீசி வருகிறார். இங்கிலாந்து சூழலில் அவர் சிறப்பான வீசும் பட்சத்தில், அவருக்கான இந்திய அணி வாய்ப்பு வெகுதூரமில்லை.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

#Sports #Cricket #Indian Cricket Team #Indian Cricket #Prithvi Shaw
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment