ஐபிஎல் 2018ல் தோனியிடமிருந்து இப்படியொரு அபாரமான ஆட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. உண்மையிலேயே, யாரும் எதிர்பார்க்கவில்லை!. இரண்டு வருடங்கள் கழித்து சிஎஸ்கே மீண்டும் ஐபிஎல் களத்திற்கு வருகிறது, தோனி மீண்டும் கேப்டனாக டாஸ் போடப் போகிறார் போன்றவை தான் ரசிகர்களின் உணர்வுப்பூர்வமான எதிர்பார்ப்பாக இருந்ததே தவிர, தோனி இவ்வளவு காட்டமாகவும், இவ்வளவு அதிரடியாகவும் மாறுவார் என நினைக்கக் கூட இல்லை.
கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு, தோனி இப்போதுதான் பந்துகளை சிதறடித்து வருகிறார். அவரது கனெக்ட் அபாரமாக உள்ளது. அதாவது, ஒவ்வொரு பந்தும், பவுலரின் கையில் இருந்து ரிலீசான பிறகு வரும் திசையை நோக்கி, அது பிட்ச் ஆகும் இடத்தை துல்லியமாக கணித்து, அந்த பந்து பேட்டின் எந்த இடத்தில் பட வேண்டும் என்ற கனெக்டிவிட்டியை இந்த ஐபிஎல் சீசனில் மிக மிக சிறப்பாக செய்து வருகிறார் தோனி.
இதுதான், மீண்டும் அந்த 'பரட்டை' தோனியை நமது கண்கள் முன்னே கொண்டு வந்திருக்கிறது. ஆனால், எப்படி இந்த சீசனில் இப்படியொரு ஃபார்முக்கு தோனி வந்தார்?! என்பது தான் சற்று புதிராக உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த தொடரில் கூட, தோனியின் பெர்ஃபாமன்ஸ் இப்படி இல்லை. இதில் பாதி கூட இல்லை.
இந்த சீசனில், இதுவரை 10 போட்டிகளில் ஆடியுள்ள தோனி, 360 ரன்களை குவித்துள்ளார். இல்லை... இல்லை... விளாசியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். அவரது ஸ்டிரைக் ரேட் 165.89. ஐபிஎல் வரலாற்றில் தோனியின் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் இதுதான். ஆவரேஜ் 90.00.
இது அனைத்தையும் விட, இந்த சீசனில் தான் அவர் அதிக சிக்ஸர்கள் விளாசியுள்ளார். மொத்தம் 27 சிக்ஸர்கள்.. அதுவும் 10 போட்டியில். இதற்கு முன்னதாக, கடந்த 2013ம் ஆண்டு, மொத்தம் 18 போட்டிகளில் ஆடிய தோனி, 25 சிக்ஸர்களை அடித்து இருந்ததே. அதை தற்போது 10 மேட்சிலேயே முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த ஐபிஎல் தொடரில், ஒட்டுமொத்தமாக அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலிலும் தோனி தான் நம்பர்.1. இப்போது புரிகிறதா தோனி என்ன ஃபார்மில் இருக்கிறார் என்று!.
ஆனால், இந்த விஷயங்களை எல்லாம் பார்க்கும் போது, நடப்பு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை கோச் ஸ்டீபன் பிளமிங் சொன்ன வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது.
'இந்த ஐபிஎல் தொடரில், ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல், ஒரு பேட்ஸ்மேனாகவும் தோனியின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்' என்பதே அந்த வார்த்தைகள். தோனியின் ஃபார்மை முன்பே கணித்து சொன்னாரா? என்பது நமக்கு தெரியாது. ஆனால், அவர் சொன்னவை இன்று மிரட்டலாக நிஜமாகி இருக்கிறது!.