2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்றால், தோனியின் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸும், அவர் அடித்த இறுதி சிக்ஸரும் தான் ரசிகர்கள் நினைவில் முதலில் தோன்றும். ஆனால், அதில் கம்பீர் அடித்த 97 ரன்களை பலரும் மறந்தே போயிருப்பார்கள். அதைப் போலத் தான், உலக கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் அடித்த முதல் டபுள் செஞ்சூரி மேட்சில், தோனியின் அதிரடியும், ஸ்டெய்னின் கதறலும் பலரது நினைவில் நிச்சயம் இருக்காது.
பூமி எனும் கிரகத்தில், ஒருநாள் கிரிக்கெட் எனும் விளையாட்டு ரகத்தில், முதன்முதலாக இரட்டை சதம் விளாசி சாதனைப் புரிந்தவர் ஒரு இந்தியர். நம்ம 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர். அந்த வரலாற்றுச் சாதனையை சச்சின் புரிந்த தினம் இன்று. 2010ம் ஆண்டு, பிப்ரவரி 24ம் தேதி குவாலியரில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 147 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார் சச்சின். 25 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உதவியுடன் இச்சாதனை நிகழ்த்தப்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் ஆகிவிட்டது. கிரிக்கெட் மூலம் இந்தியர்களுக்கு உலகரங்கில் பெருமை சேர்த்த சச்சினின் சாதனைகளில், ஆதார் எண்ணை இணைப்பது போல் இணைந்தது இந்த டபுள் செஞ்சுரியும்!.
ஆனால், அதே போட்டியில் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆடிய ருத்ரதாண்டவமும், அதனால் ஸ்டெய்ன் மற்றும் பார்னல் படைத்த மோசமான உலக சாதனைகளும் மறந்தே போயின.
ஆம்! அந்தப் போட்டியில் யூசுப் பதான் அவுட்டான பின்பு, 41.2வது ஓவரில் களமிறங்கினார் கேப்டன் தோனி. வழக்கம் போல் ஆரம்பத்தில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி, 10 பந்துகளில் 14 ரன்களே எடுத்து இருந்தார். 45 ஓவர்கள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் 340/3. அதன்பிறகு 46வது ஓவரில் இருந்து தோனியின் ஆட்டமே மாறியது.
பாஸ்ட் பவுலிங்கில் உலக அணிகளை மிரட்டிக் கொண்டிருந்த டேல் ஸ்டெய்னை வெதும்பவே வைத்து விட்டார் தோனி. சிக்ஸரும், பவுண்டரியும் மாறி மாறி பறக்க, விழி பிதுங்கி போனார்கள் தென்னாப்பிரிக்க பவுலர்கள். ஓப்பனிங்கில் இருந்து ஆடிவருவதால் டயர்டாகி போன சச்சின், மெல்ல மெல்ல டபுள் செஞ்சூரியை நெருங்கிக் கொண்டிருக்க, தோனி ஸ்டெய்னை தெற்கு திசையிலும், மற்ற பவுலர்களை வடக்கு திசை நோக்கியும் பறக்க விட்டுக் கொண்டிருந்தார். முடிவில் 35 பந்துகளில் 68 ரன்கள் விளாசிய தோனி, இந்திய அணியை 400 ரன்களை கடக்க வைத்தார். இதில் 7 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 194.28.
/tamil-ie/media/media_files/uploads/2018/02/a449-300x217.jpg)
அதிலும், ஸ்டெய்னின் வைட் பந்தை லாங் ஆஃபில் தோனி விளாசிய போது, பறந்து கொண்டிருந்த அந்த பந்தை ஸ்டெய்ன் பார்க்க கூட விரும்பவில்லை. அடுத்த பந்தை பவுல் செய்ய நடக்க ஆரம்பித்துவிட்டார்.
அப்போட்டியில் பார்னல் 95 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அவரது ஒருநாள் கிரிக்கெட் கரியரில் மிக மோசமான பந்து வீச்சு இதுதான். அதேபோல், ஸ்டெய்ன் 10 ஓவர்கள் வீசி 89 ரன்களை வாரி வழங்கினார். ஒருநாள் கிரிக்கெட்டில், ஸ்டெய்னின் இரண்டாவது மிக மோசமான பந்துவீச்சு இதுதான். ஒரு விக்கெட் கூட அவருக்கு கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் சச்சின் பஞ்சர் செய்திருந்ததில் நொந்து போயிருந்த ஸ்டெய்னை இறுதிக் கட்டத்தில் தோனி 'சம்பவமே' செய்ய மனுஷனை பார்க்க நமக்கே வேதனையாகத் தான் இருந்தது.
(குறிப்பு: இப்போது கேப்டனாகவும், பேட்டிங்கில் 'சச்சினின் சாதனைகளை முறியடிக்க தகுதியுள்ள ஒரே வீரர்' என்று அழைக்கப்படுபவருமான விராட் கோலிக்கு, அன்றைய போட்டியில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்து இருந்தாலும், அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).