நல்ல பசியில் ஒரு ஹோட்டலுக்கு லன்ச் சாப்பிட போனா, 200 ரூவா-னு சொன்னாலே நமக்கு நெஞ்சு வலி வந்திடும்... 7 லட்சம் ரூபாய் பில் போட்டா எப்படி இருக்கும்? அப்படி ஒரு பிரம்மாண்ட அதிர்ச்சி தான் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு நேர்ந்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரரும், தற்போதைய டாப் வர்ணனையாளர்களில் ஒருவருமான ஆகாஷ் சோப்ரா தான் இந்த சம்பவத்திற்கு சொந்தக்காரர். சமீபத்தில் இந்தோனேசியா சென்றிருந்த ஆகாஷ், அங்குள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்று இருக்கிறார். சில பல இந்திய அயிட்டங்களை உள்ளே தள்ளிவிட்டு, கை கழுவி வந்த பிறகு பில்லை வாங்கிப் பார்த்தால் ரூ.699,930 என குறிப்பிட்டு இருந்திருக்கிறது. ஆகாஷும் வேறு வழியில்லாமல் பில்லை செலுத்திவிட்டு, அந்த பில்லை போட்டோ எடுத்து ட்விட்டரில் போஸ்ட் செய்து நியாயம் கேட்டுள்ளார்.
அப்படி என்னடா இந்த ஹோட்டல்ல இருக்கு-னு கூகுள்லலாம் போய் தேடிப் பார்த்தால், அப்புறம் தான் தெரியுது, மனிதர் அனைவரையும் நன்றாக கலாய்த்து இருக்கிறார் என்று. என்னடா மேட்டர்னா.... ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு இந்தோனேசியாவின் ருபியாவில்(Rupiah) 210 ரூபாய்க்கு சமமாம். நம்மாளு அங்க போய் இந்திய ரூபாயின் மதிப்புப் படி 3,334 ரூபாய்க்கு சாப்பிட்டிருக்கிறார். அதை அவங்க ஊரு கணக்குப்படி 699,930 என பில் போட்டு கொடுத்திருக்கின்றனர்.
செத்த நேரத்துல தலைய சுத்த விட்டுட்டியேப்பா!!!