இந்தாண்டிற்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர், கடந்த ஜுலை 22-ஆம் தேதி தொடங்கியது. இத்தொடர் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடக்கிறது. தூத்துக்குடி பாட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், விபி திருவள்ளூர் வீரன்ஸ், காரைக்குடி காளை, ரூபி திருச்சி வாரியர்ஸ் என மொத்தம் எட்டு அணிகள் இந்தத் தொடரில் விளையாடி வருகின்றன.
போன வருடம் முதன் முதலாக தொடரப்பட்ட இந்தத் தொடரில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. கடந்து ஆண்டு அசத்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு ஐபிஎல்-ல் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு விளையாட தேர்வானார். அதேபோல், வாஷிங்டன் சுந்தரும் புனே சூப்பர் ஜெயண்ட் அணியில் விளையாடினார். இதுபோன்று தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அடையாளம் காணப்பட்டு அடுத்த லெவலுக்கு செல்கின்றனர். இதனால், இந்த தொடரின் மீதான நம்பிக்கை வீரர்கள் மத்தியில் பெரிதும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், திருச்சி வாரியர்ஸ் அணியின் ஆலோசகராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ள திருச்சி வாரியர்ஸ் அணி நிர்வாகம், ஜான்டி ரோட்ஸ் அணியின் விளம்பர தூதுவராகவும் செயல்படுவார் என்று அறிவித்துள்ளது.
ஜான்டி ரோட்ஸ் நியமனம் குறித்து பேசிய திருச்சி அணியின் தலைமை பயிற்சியாளர் டினு யோகனன், "ரோட்ஸ் போன்ற சிறந்த வீரரின் அனுபவங்கள், இளம் வீரர்களுக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும். அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வீரர்கள் பயிற்சியின் போது அவரது இருப்பு மிகப்பெரிய ஊக்கம் கொடுக்கும். ஆகஸ்ட் 7-ஆம் தேதி அணியுடன் ஜான்டி ரோட்ஸ் இணைகிறார்" என்றார்.
இந்த தொடரில் பங்கேற்கும் கோவை அணிக்கு தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் லான்ஸ் குளுஸ்னர் பயிற்சியாளராகவும், திருவள்ளூர் அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.