டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசையை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் டாப்–10 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், நான்கு இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் 85 ரன்கள் விளாசியதுடன், தொடர்ச்சியாக 7 இன்னிங்சில் அரைசதம் எடுத்த சாதனையாளர் பட்டியலில் இணைந்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல், 2 இடங்கள் முன்னேறி 9–வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் 25 வயதான லோகேஷ் ராகுல் தனது முந்தைய சிறந்த டெஸ்ட் பேட்டிங் ரேங்கிங்கை சமன் செய்துள்ளார். புஜாரா ஒரு இடம் இறங்கி 4–வது இடம் பெற்றுள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி மாற்றமின்றி 5–வது இடத்தில் நீடிக்கிறார்.
பல்லகல்லேவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 17 ரன்னில் ஆட்டம் இழந்த இன்னொரு இந்திய வீரர் அஜிங்யா ரஹானே 6–வது இடத்தில் இருந்து 10–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே நேரத்தில், 119 ரன்கள் குவித்ததுடன் இலங்கை தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் 10 இடங்கள் ஏற்றம் கண்டு 28–வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட்டில் தனது முதல் சதத்தை 86 பந்துகளில் எட்டி அசத்திய இந்திய ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 45 இடங்கள் கிடுகிடுவென எகிறி 68–வது இடம் வகிக்கிறார்.
பவுலர்கள் தரவரிசையில் டாப்–10 இடத்தில் எந்த மாற்றமும் இல்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், அஷ்வின் 3–வது இடத்திலும் தொடருகிறார்கள். முகமது ஷமி 19–வது இடத்திலும் (ஒரு இடம் உயர்வு), உமேஷ் யாதவ் 21–வது இடத்திலும் (ஒரு இடம் ஏற்றம்), குல்தீப் யாதவ் 58–வது இடத்திலும் (29 இடம் முன்னேற்றம்) இருக்கிறார்கள்.
அதேசமயம், ஐசிசி நடத்தை விதிமுறைகளை மீறியதால் கிடைத்த தடை நடவடிக்கையால், இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆட முடியாமல் போன ரவீந்திர ஜடேஜா ஆல்–ரவுண்டரின் தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளார்.
வங்காளதேச வீரர் ஷகிப் அல்–ஹசன் (431 புள்ளி) மீண்டும் ஆல்–ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். ஜடேஜா 430 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், அஸ்வின் 422 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும், இங்கிலாந்தின் மொயீன் அலி 4–வது இடத்திலும் (409 புள்ளி), பென் ஸடோக்ஸ் 5–வது இடத்திலும் (360 புள்ளி) உள்ளனர்.
இலங்கையுடனான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றதன் மூலம் கூடுதலாக 2 புள்ளி சேர்த்துள்ள இந்திய அணி, மொத்தம் 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் கம்பீரமாக நீடிக்கிறது. ஒரு புள்ளியை இழந்த இலங்கை 90 புள்ளிகளுடன் 7–வது இடத்தில் இருக்கிறது.
India have extended their lead at the top of the @MRFWorldwide ICC Test Rankings to a giant 15 points after the 3-0 whitewash of Sri Lanka. pic.twitter.com/Up1Vb6Fm1U
— ICC (@ICC) 15 August 2017
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1–3 கணக்கில் இழந்த தென்ஆப்பிரிக்க அணி 7 புள்ளிகளை பறிகொடுத்து, 110 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கும், தென்ஆப்பிரிக்காவுக்கும் இடையே 15 புள்ளிகள் வித்தியாசம் இருக்கிறது. அதனால் இப்போதைக்கு இந்தியாவின் டெஸ்ட் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து இல்லை என்றே தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.