காலே டெஸ்ட் : அறிமுக வீரராக ஹர்திக் பாண்டியா!

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ஹர்திக் பாண்டியா, காலேயில் இன்று (ஜூலை 26) தொடங்கிய முதல் டெஸ்டில் களமிறங்கும் வாய்ப்பை பெற்றார்.

காலே டெஸ்டில் அறிமுக வீரராக இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருக்கிறார்.
இந்திய அணியில் சரியான ஆல்ரவுண்டர் இல்லாத நெடுநாள் குறையை போக்கி வருபவர் ஹர்திக் பாண்டியா. குஜராத்தை சேர்ந்த 23 வயது இளைஞரான ஹர்திக் பாண்டியா இதுவரை 17 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறார். அவற்றில் இரு அரை சதங்கள் உள்பட 289 ரன்கள் எடுத்திருக்கிறார். இவரது ரன்கள் சராசரி 41.28. இது சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி பேட்ஸ்மேன்களின் சராசரிக்கு இணையானது. இந்தப் போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா வீழ்த்தியிருப்பதுதான் அவரது சிறப்பம்சம்!
இதேபோல டி 20 போட்டிகளிலும் இதுவரை 19 ஆட்டங்களில் இடம் பெற்றிருக்கிறார். 10 ஆட்டங்களில் மட்டுமே அதில் பேட்டிங் வாய்ப்பு பெற்ற அவர், மொத்தம் 100 ரன்கள் சேர்த்திருக்கிறார்.
2016 ஜனவரியில் அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 போட்டி மூலமாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆன பாண்டியா, இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். முதல்முறையாக இலங்கை சென்றுள்ள இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ஹர்திக் பாண்டியா, காலேயில் இன்று (ஜூலை 26) தொடங்கிய முதல் டெஸ்டில் களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். முன் தினம் பயிற்சியின்போதே ஹர்திக் பாண்டியா களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார். இன்று காலை ஆட்டத்திற்கான 11 பேர் அறிவிக்கப்பட்டபோது, அது உறுதி செய்யப்பட்டது.
ஆடும் லெவன் வருமாறு : அபினவ் முகுந்த், ஷிகர் தவான், புஜாரா, கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ஹர்திக் பாண்டியா, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகம்மது ஷமி.
இதன் மூலமாக இரு வேகப்பந்து வீச்சாளர்கள், இரு ஸ்பின்னர்கள், ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர், ஒரு விக்கெட் கீப்பர், 5 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் என்ற கலவையுடன் இந்திய அணி களம் இறங்கியிருக்கிறது.
முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, புவனேஷ்குமார், இஷாந்த் சர்மா மற்றும் சைனாமேன் வகை ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் அமர்ந்திருக்கிறார்கள். தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலில் அவதிப்படுவதால் தமிழக வீரர் அபினவ் முகுந்த் தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close