சூதாட்ட புகார் எழுந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக (2016,2017) ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கின்றன.
தடை முடிந்து ஐ.பி.எல் களத்துக்குத் திரும்பியுள்ள சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், கடந்த 2015-ம் ஆண்டில் தங்கள் அணிகளில் விளையாடிய 3 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பி.சி.சி.ஐ அறிவித்தது. அந்த இரு அணிகளிலும் விளையாடிய வீரர்கள் கடந்த இரு ஆண்டுகளாக நடந்த ஐ.பி.எல் தொடரில் மற்ற அணிகளுக்காக விளையாடி வந்தனர்.
தோனி, அஷ்வின் ஆகியோர் புனே அணிக்காகவும் ரெய்னா, ஜடேஜா, மெக்குல்லம் போன்றோர் குஜராத் அணிக்காகவும் ஆடினர். இந்த நிலையில் தோனி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சென்னை அணிக்காக மீண்டும் தக்க வைக்கப்பட்டனர். விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், சர்ஃபராஸ் கான் ஆகியோரை பெங்களூரு அணி தக்க வைத்தது. ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா / ஹர்திக் பாண்ட்யா, க்ருனல் பாண்ட்யா ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்தது.
இந்த நிலையில், பல நட்சத்திர வீரர்களை சில அணிகள் கழட்டிவிட்டுள்ளன. அந்த வீரர்கள் அனைவரும், ஜனவரி 27 மற்றும் 28ம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். இதில், இந்திய அணிக்காக விளையாடிய வீரர்களுக்கான அடிப்படை தொகையாக ரூ.50 லட்சம், ரூ.1 கோடி, ரூ.1.5 கோடி, ரூ.2 கோடி என நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை தெரியாமல் உட்கொண்டதாக ஐந்து மாதம் விளையாட தடை பெற்றுள்ள யூசுப் பதானின் அடிப்படை விலை 75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் இர்பான் பதானின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹர்பஜனின் அடிப்படை விலை ரூ.2 கோடியாகவும், கொல்கத்தா அணிக்காக இரண்டு முறை கோப்பை வாங்கிக் கொடுத்த கெளதம் கம்பீரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற வீரர்களின் அடிப்படை விலை விவரம் விரைவில் வெளியாக உள்ளது.