கடந்த ஜூலை 11-ஆம் தேதி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டார். சச்சின், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு இவரை தேர்வு செய்தது. அதேபோன்று, பவுலிங் பயிற்சியாளராக ஜாஹீர் கானும், முக்கியமான வெளிநாட்டு தொடர்களின் பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்த நிலையில், ஜாகீர் கான் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக பிசிசிஐ அதிரடியாக அறிவித்தது. அதோடுமட்டுமில்லாமல், ரவி சாஸ்திரி சிபாரிசு செய்த பரத் அருணையே பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது. சஞ்சய் பாங்கர் துணை பயிற்சியாளராகவும், ஆர்.ஸ்ரீதர் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்தது.
இதுகுறித்து இந்திய வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டியில், "கும்ப்ளே விவகாரத்தில் பிசிசிஐ இன்னும் தொழில் நேர்த்தியோடு நடந்திருக்க வேண்டும். அனில் கும்ப்ளே போன்ற மிகப்பெரிய சாதனையாளர்களுக்கு அதிக மரியாதை நீங்கள் கொடுத்திருக்க வேண்டும். கேப்டனாகவும், ஒரு வீரராகவும் இந்திய அணிக்கு மாபெரும் பங்காற்றியவர் கும்ப்ளே.
இந்த பாணியில் சிக்கலை நீங்கள் கையாண்டால், அது ஒரு மோசமான பாடத்தை தான் கொடுக்கும். இதனால் தான் உங்களுக்கு ஏதுவான பயிற்சியாளர் விண்ணப்பங்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என நான் நினைக்கிறேன்.
பயிற்சியாளர் நியமனம் தற்போது முடிந்துவிட்டது. அனில் கும்ப்ளேவோ, ரவி சாஸ்திரியோ, இறுதியில் இந்தியாவின் வெற்றி தான் முக்கியம். இந்தியா வெற்றிபெற்றால், எந்த பயிற்சியாளரின் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்யப்படுவதில்லை.
வெளியிலிருந்து கேப்டன் விராட் கோலிக்கு அழுத்தம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட்டுவிட்டார். இந்திய அணியின் சக ஸ்டாஃப்களும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.