ஐபிஎல்-2017: அதிரடி காட்டிய ரெய்னா... குஜராத் அணிக்கு 2-வது வெற்றி

ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் லயன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் கொல்கத்தா அணியை கடைசி இடத்தில்...

கொல்கத்தா: கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை குஜராத் அணி வீழ்த்தியது.

கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி அந்த தொடரிலேயே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி 3-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், கடந்த ஐபிஎல் போல இந்த தொடரிலும் குஜராத் அணி ஜொலிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த தொடரில் வெற்றிகளை குவிக்க திணறி வந்தது. இந்நிலையில், கொல்கத்தா அணியை வீழ்த்தி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குஜராத். நடப்புத் தொடரில் 6-போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

இந்நிலையில், கொல்கத்தா அணியை அதன் சொந்த மண்ணில் குஜராத் அணி எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுதம் காம்பீர், சுனில் நரைன் ஜோடி களம் கண்டது.

தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கிய சுனில் நரைன், பிரவின் குமாரின் முதல் ஓவரில் மூன்று பவுண்டரிகளை அடித்து அசத்தினார். அடுத்து வந்த ஓவர்களில் தொடர்ந்து அதிரடிய காட்டிய சுனில் நரேன் குஜராத் பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தினார். இதனால், 3 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 44 ரன்களை எடுத்திருந்தது.

கொல்கத்தாவின் அதிரடியை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானித்த குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா அவரே பந்து வீச தீர்மானித்தார். 4-வது ஓவரை வீச வந்த ரெய்னாவால், பஞ்சாப் அணிக்கு பலன் கிட்டியது. ரெய்னா வீசிய அந்த ஓவரில் அடித்து ஆட முயற்சித்த சுனில் நரைன், ஃபாக்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 17 பந்துகளை சந்தித்த நரைன் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன் பின்னர் களம் இறங்கிய ராபின் உத்தப்பா, கம்பீருடன் இணைந்து விளையாடினார். இதனால் 10-ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 92-ரன்களை எடுத்திருந்தது. ஒரு முனையில் கவுதம் காம்பீர் 33 ரன்களில் அவுட் ஆக, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்தார் உத்தப்பா. 48 பந்துகளை சந்தித்த உத்தப்பா 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மணிஷ் பாண்டே 24 ரன்கள் எடுத்தார். யூசப் பதான் 11 ரன்களுடனும், சூர்ய குமார் யாதவ் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20-ஓவர்களின் முடிவில் 5-விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது.
188 எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச், பிரென்டண் மெக்கல்லம் களத்திற்குள் புகுந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.3 ஓவர்களில் 42 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணிக்கு தொடக்கத்திலேயே நம்பிக்கையை ஏற்படுத்தியது. 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து பின்ச் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரெய்னா களம் இறங்கிய சிறிது நேரத்தில் மழை வந்ததால், ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டு மீண்டும் தொடங்கியது.

குஜராத் அணி 6.2 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்திருந்த போது மெக்கல்லம் அவுட் ஆனார். அவர் 17 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். ஒரு முனையில் குஜராத் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்து கொண்டிருந்த போதிலும், கேப்டன் சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி கொல்கத்தாவின் பந்துவீச்சை சிதறடித்தார்.

17.5 ஓவர்களில் குஜராத் அணி 180 ரன்களை எடுத்திருந்தபோது, சுரேஷ் ரெய்னா குல்திப் யாதவ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரெய்னா 46 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 84 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இறுதியில் குஜராத் 18.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 19 ரன்களுடனும், ஃபாக்னர் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஒரு விக்கெட் மற்றும் அதிரடியாக 84 ரன்களை குவித்த குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close