Happy Birthday Sachin : மாஸ்டர் பிளேஸ்டர் சச்சின் இன்று தனது 46வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடுகிறார்.
”சச்சின் சச்சின்” ”சச்சின் சச்சின்” அரங்கத்தில் இப்படி அடி தொண்டையில் இருந்து கத்தியவர்களுக்கு தெரியும் அந்த ஃபீல் எப்படி இருக்கும் என்று. கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்க்கையில் 46 ஆவது சதம்.
தன்னுடைய 16 ஆவது வயதில் பேட்டை பிடித்த சச்சின், இன்றும் அவரின் ரசிகர்களுக்கு ஃபீல்டில் இருக்கும் ஹீரோ தான். கடந்த 2012ம் ஆண்டு ஒருநாள் போட்டி தொடரிலிருந்து சச்சின் ஒய்வு பெற்ற பிறகு கிரிக்கெட்டையே பார்க்க மாட்டோம் என்று சென்றவர்கள் ஏராளம் பேர்.
அதைத்தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிக்கும் சச்சின் பாய் பாய் சொல்லிவிட்டார். ஃபீல்ட்டை விட்டு சென்றாலும் இப்போதும் சச்சின் அரங்கத்திற்கு வந்தால் போதும், அரங்கமே அதிரும். கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை செய்து சரித்திர நாயகன் என அழைக்கப்படும் சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் என்றும் ரசிகர்களால் அழைக்கபடுகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/04/sachin-2.jpg)
தனது நேர்த்தியான பேட்டிங்கின் மூலம் எதிரணியின் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சச்சின் செல்லப்பெயர் மாஸ்டர் பிளாஸ்டர். தனி நபராக பல சாதனைகளை படைத்த போதிலும், உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே சச்சினின் கனவாக இருந்து வந்தது. 2011-ம் ஆண்டு இந்திய அணி 2-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியதனால் அந்த மாபெரும் கனவு சாத்தியமானது.24-ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் தனது பேட்டை பயன்படுத்தி எதிரணிக்கு பதில் சொல்லும் சச்சினுக்கு உலக அரங்கில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இப்படி சாதனை மேல் சாதனைக்கு சொந்தக்காரரான சச்சின் வாழ்வில் மறக்க முடியாத 5 ஒருநாள் போட்டிகள் இருக்கின்றன. இந்த போட்டிகளில் சச்சின் நிகழ்த்திய சாதனை அவரை உலக அளவில் திரும்பி பார்க்க வைத்தது. இன்று அவரின் பிறந்த நாள் ஸ்பெஷலாக அந்த 5 ஒருநாள் போட்டிகளில் நடந்ததை திரும்பி பார்க்கலாமா?
/tamil-ie/media/media_files/uploads/2019/04/sachin.jpg)
1. இந்தியா vs ஆஸ்திரேலியா (2008)
அதுவரை சிட்னி மைதானத்தில் இந்திய அணி வெற்றி பதிவு செய்யாமல இருந்தது. ஆனால் அன்று வரலாற்றை மாற்றி எழுதினார் சச்சின். லீ, ஜான்ஜன், பிராக்கென் ஆகியோரின் வேகபந்து வீச்சை சமாளித்து இந்திய அணியை ஒருநாள் தொடரில் வெற்றி பெற செய்து ஆஸ்திரேலியா மண்ணில் சாதனை புரிந்தார் சச்சின். 120 பந்துகளில் சச்சின் அடித்த 117 ரன்கள் அன்றைய தினம் இந்தியாவின் மிகப் பெரிய வெற்றிக்கு காரணம் என்று அன்றைய தினம் அவருடன் விளையாடிய அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களும் கூறி இருந்தனர்.
2. இந்தியா vs ஆஸ்திரேலியா (2009)
ஐதராபாத் மண்ணில் நடந்த இந்த போட்டியில் ஏழு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது இந்திய அணி. 351 ரன்களை குவித்து இருந்த ஆஸ்திரேலியா அணி, பந்து வீச்சில் மிரள வைத்திருந்தது.
இந்திய அணியைச் சச்சின் வழிநடத்தினார். 19 பவுண்டரிகள், 4 சிக்ஸ்கள் என இந்தியாவின் வெற்றியை நோக்கிச் சச்சின் நகர்த்தினார். அவர் ஆட்டமிழந்தவுடன், இந்திய அணியின் விக்கெட்கள் சரிந்தது. 17 பந்துகளில் 19 ரன்கள் என்ற எளிய இலக்கைக் கூட கடக்க முடியாமல் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது. அந்த போட்டியில் சச்சின் 141 பந்துகளுக்கு 175 ரன்களை எடுத்திருந்தார்.
3. இந்தியா vs ஆஸ்திரேலியா ( 1998)
சச்சின் 25 ஆவது பிறந்த நாளில் அவருக்கு கிடைத்த கிஃப்ட் தான் இந்த ஆட்டம். 275 ரன்களை குவித்து இருந்த ஆஸ்திரேலியா அணிக்கு தண்ணி காட்டினார் சச்சின். 131 பந்துகளில் சச்சின் எடுத்த 134 ரன்கள் இந்தியாவை வெற்றி நோக்கி பயணிக்க வைத்தது. ஷார்ஜா மண்ணில் ஆஸ்திரேலியா தோல்வியை கண்டது.
/tamil-ie/media/media_files/uploads/2019/04/sachin-1.jpg)
4. இந்தியா vs ஆஸ்திரேலியா ( 1998)
சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையில் சிறந்த தொடர் இது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவரது புகழ்பெற்ற இரண்டு சதங்கள், இந்தத் தொடரிலிருந்து வந்தது இந்த ஆட்டமே ஒரு எடுத்துகாட்டு.வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. இறுதி போட்டிகு செல்ல வேண்டும் என்றால் இந்தியா இந்த ஆட்டத்தில் ஜெயித்தாக வேண்டிய நிலைமை. தனது பொறுப்பை உணர்ந்த சச்சின் 131 பந்துகளில் 143 ரன்களை எடுத்தார்.
இருப்பினும் இந்தியா தோல்வியுற்றது. ஆனால் டெண்டுல்கரின் முயற்சிகள் வீண் போகவில்லை. இந்தியாவின் ரன் ரேட் நியூஸிலாந்தின் ரன் ரேட்டை தாண்டியது. இந்திய அணி சச்சினால் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.
5. இந்தியா vs பாகிஸ்தான் ( 2003 உலக கோப்பை)
இந்தியா தன் திறமையை வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் சோயிப் அக்தர் ஆகியோருக்கு எதிராக நிரூபிக்க நேர்ந்தது.டெண்டுல்கர் தனது அபார ஆட்டத்தை அன்று வெளிபடுத்தினார். 75 பந்துகளில் 98 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அன்று அவர் அக்தர் பந்தில் அடித்த அப்பர் சிக்ஸ் சிறந்த ஒரு சிக்ஸராக இன்றுவரை பார்க்கப்படுகிறது.