சர்வதேச கிரிக்கெட் அரங்கில், இந்தய அணியின் முக்கிய வீரராக வளர்ந்து வருபவர் ஹர்திக் பாண்ட்யா. நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், பாண்ட்யா தொடர் நாயகன் விருது வென்றிருந்தார். அதிரடி வீரராகவும், வேகப்பந்து வீச்சாளராகவும் வலம் வரும் ஹர்திக்கை, பலரும் முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ்வுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி அளித்துள்ள ஒரு பேட்டியில், "இந்திய அணிக்கு உதவி செய்யும் அளவிற்கு ஹர்திக் பாண்ட்யாவிற்கு தகுதி உள்ளது. ஆனால், இந்த நேரத்தில் அவரை கபில் தேவ்விற்கு இணையாக யாரும் ஒப்பிட வேண்டாம். ஏனெனில், கபில் தேவ் என்பவர் உண்மையான சாம்பியன். 10-15 வருடங்கள் வரை ஹர்திக் இதேபோன்று சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அப்போது இதுகுறித்து நாம் பேசலாம். ஹர்திக் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட நாம் அனுமதிக்க வேண்டும். அவர் ஒரு நல்ல, நேர்மறையான கிரிக்கெட்டர். அவர் ஒரு சிறந்த போராளியும் கூட. கேப்டன் விராட் கோலிக்காக தனது சிறப்பான பணியை தொடர்ந்து அவர் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய கங்குலி, "இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மீது இந்தியா முற்றிலும் ஆதிக்கம் செலுத்தியது. பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டு துறையிலும் மிக மிக சிறப்பான நிலையில் இந்திய அணி உள்ளது. இதனால் தான் கடந்த ஒன்றரை ஆண்டுகாலங்களாக இந்தியா வெற்றிகளை குவித்து வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாகிஸ்தானிற்கு எதிரான இறுதிப் போட்டியைத் தவிர, இந்திய அணி அனைத்து நிலைகளிலும் அற்புதமாக செயல்பட்டு வருகிறது. அடுத்ததாக, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் இந்தியா மோதவுள்ளது. அதிலும், இந்தியாவே ஆதிக்கம் செலுத்தும் என நான் நினைக்கிறேன்" என்றார்.
ஆஸி.,க்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு 38 வயதான ஆஷிஷ் நெஹ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கங்குலி, "இந்திய அணிக்கு இது ஒரு நல்ல செய்தி. தேர்வாளர்கள் திறமையை தான் பார்த்துள்ளனர். வயதை பார்க்கவில்லை. நெஹ்ரா ஒரு மிகச்சிறந்த டி20 பவுலர். கடந்த டி20 உலகக்கோப்பையில் அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் பார்த்தோம். இடது கை பந்துவீச்சாளரான நெஹ்ரா, விதவிதமான லெந்தில் பந்து வீச முடியும். நடைபெறவுள்ள டி20 தொடரிலும் அவர் தனது அற்புதமான பங்களிப்பை ஆற்றுவார்" என்றார்.
கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டிலும் முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து கங்குலியிடம் கேட்ட போது, "இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக வர, விராட் கோலிக்கு நிறைய தகுதிகள் உள்ளது. அதில் சந்தேகமே இல்லை. அடுத்த ஐந்து மாதங்கள் அவருக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் உலகக் கோப்பைக்கு மீண்டும் இங்கிலாந்து என இந்திய அணி சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. விராட் இப்போது சரியான திசையில் சென்றுக் கொண்டிருக்கிறார். சரியான வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி, அணியை தயார் செய்துக் கொண்டிருக்கிறார்.
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளை இந்தியா எளிதில் வீழ்த்திவிடும். ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அந்நாட்டில் விளையாடுவது இந்திய அணிக்கு சவாலான விஷயம். இருப்பினும், இப்போதுள்ள இந்திய அணி அங்கும் சிறப்பாக விளையாடும் என்றே நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.