ஹர்திக் பாண்ட்யாவுக்கு இதைவிட பெரிய விருது எதுவும் கிடைத்துவிட முடியாது. ஜாம்பவான் வீரரான கபில்தேவ் வாயில் இருந்து வந்திருக்கும் புகழ் வார்த்தைகள் அப்படி!
ஹர்திக் பாண்ட்யாவின் வயது 23. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். ஐ.பி.எல். மூலமாக அடையாளம் காணப்பட்டவர். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் தேடலுக்கு விடையாக வந்து சேர்ந்திருப்பவர்! 6-வது வீரராக இறக்கி விட்டாலும் அதிரடியில் பட்டையை கிளப்பி எதிரணியை கலங்க வைக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்புத் தொடரில் முன்கூட்டியே 4-வது பேட்ஸ்மேனாக இவரை உள்ளே அழைத்தார் கேப்டன் விராட் கோலி. அந்தப் போட்டியிலும் 4 சிக்சர்கள் துணையுடன் 78 ரன்கள் குவித்தார். இவரை, ‘இந்திய கிரிக்கெட் அணியின் சொத்து’ என வர்ணித்தார் கோலி.
அதையெல்லாம்விட சிறப்பு, கபில்தேவ் சூட்டியிருக்கும் புகழாரம்தான்! கிரிக்கெட் உலகம் உருவாக்கிய மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களை பட்டியலிட்டால் ரிச்சர்ட் ஹேட்லி, கபில்தேவ், இம்ரான்கான் என இரண்டு அல்லது 3-வது இடத்தில் வரக்கூடியவர் கபில்தேவ். 1983-ல் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னராக திகழ்ந்த மேற்கு இந்திய அணியை வீழ்த்தி, இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை பெற்றுத்தந்த கேப்டன் அவர்!
சச்சின் டெண்டுல்கருக்கு முந்தைய காலம் வரை இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு உந்துசக்தியாக இருந்தவர், இந்தியர்களாலும் வேகப்பந்து வீச்சில் சாதிக்க முடியும் என உலகுக்கு உணர்த்தியவர், உடல் தகுதி பற்றி பெரிய விழிப்புணர்வு இல்லாத 1980-களிலேயே ஒரு டெஸ்ட் போட்டியைக்கூட தவறவிடாமல் ஆடும் தகுதியை பெற்றிருந்தவர்... என எத்தனை புகழுரைகளுக்கும் தகுதிபெற்ற கபில்தேவ், தன்னைவிட சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யாவை புகழ்ந்திருக்கிறார்.
கபில்தேவுக்கு பிறகு, இந்திய அணியில் அவ்வப்போது சிலரை ஆல்ரவுண்டர் என கூறி வந்திருக்கிறோம். அவர்களில் ராபின்சிங், அஜித் அகர்கர், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா என யாரையும் தனக்கு நிகராகக்கூட கபில் சொன்னதில்லை. ஆனால் பாண்ட்யாவை அவர் குறிப்பிட்டிருப்பது, இந்தியாவின் நீண்ட ஆல்ரவுண்டர் தேடலுக்கு விடை கிடைத்துவிட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
ஹர்திக் பாண்ட்யாவுக்கு கிரிக்கெட்டில் இது ஆரம்பக் கட்டம்தான்! தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வை வெற்றிகரமாக தொடங்கியிருக்கும் அவர், கபிலின் இடத்தைப் பிடிக்க இன்னும் உழைக்க வேண்டும். அதற்குள் கபிலிடம் இருந்து அப்படியொரு வார்த்தை வந்திருக்கிறது என்றால், இதில் கபிலின் பெருந்தன்மையும் அடங்குகிறது.
அதேசமயம், பாண்ட்யா இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது என்பதையும் தனது பேட்டியில் சுட்டிக் காட்டுகிறார் கபில். ‘பாண்ட்யாவுக்கு இது தொடக்கம்தான். அவருக்கு தேவையற்ற நெருக்கடியை நாம் உருவாக்க கூடாது. எனினும் சிறந்த வீரராக உருவாகும் திறன் அவரிடம் இருக்கிறது’ என கூறியிருக்கிறார் கபில்.
உள்ளூர் போட்டிகளில் பரோடா அணிக்காக ஆடிய பாண்ட்யா, மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல். அணி மூலமாக வெளி உலகுக்கு அறிமுகமானார். 2019 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா அதிகம் நம்பியிருக்கும் நட்சத்திரம் அவர். ஆனாலு கபில் கூறியதுபோல, அவருக்கு அதிக நெருக்கடி ஏற்படாத வகையில் அவரை கையாள வேண்டும்.