இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் இயன் சேப்பல் புகழந்துள்ளார். கபில் தேவ் ஓய்வு பெற்ற பின்னர், ஃபாஸ்ட் பவுலிங் மற்றும் பேட்டிங் என ஒருசேர கொண்ட வீரருக்காக ஏங்கி வந்த இந்திய ரசிகர்களுக்கு, பாண்ட்யா தான் பதில் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "கபில் தேவ் ஓய்வுக்கு பின்னர் ஏங்கிக் கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு ஹர்திக் பாண்ட்யா மிகச் சிறந்த வீரராக கிடைத்துள்ளார். ஆஸ்திரேலியாவை 4-1 என இந்திய அணி பந்தாடியதற்கு, பாண்ட்யாவின் அதிரடி ஷாட்களும் ஒரு முக்கிய காரணமாகும். இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் அவர் எந்தளவிற்கு அணிக்கு பயன்படுகிறார் என்பதில் தான் விஷயமே உள்ளது.
ஹர்திக் பாண்ட்யா போன்ற ஒரு வீரர், டாப் ஆறு பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும், மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பந்துவீசக் கூடியவராகவும் இருப்பதால், டெஸ்ட் போட்டிகளில் அதிகம் இனி வெற்றிகளை குவிக்க இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இவரையும் சேர்த்து அணியில் மொத்தம் ஐந்து பவுலர்கள் இருப்பதால், எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும், இந்தியாவால் அதனை திறம்பட கையாள முடியும்.
பாண்ட்யாவை இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உடன் கண்டிப்பாக ஒப்பிடலாம். அதற்கு தகுதியானவர் தான் அவர். ஒவ்வொரு முறையும், பாண்ட்யா விளையாடும் ஸ்டைலை பார்க்கும் போது எனக்கு ஸ்டோக்ஸ் தான் நினைவுக்கு வருகிறார். களத்தில் ஸ்டோக்ஸ் போன்று சிறப்பாக செயல்பட வேண்டும். அதேசமயம், ஒரு 'குடிமகனாக' ஸ்டோக்ஸ் போன்று தன்னை தானே அழித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
ஆனால், களத்தில் இருவருமே ஆக்ரோஷமாக செயல்படுகின்றனர். இதனால், அவர்களால் போட்டியின் முடிவை மாற்றும் திறனுடைய வீரர்களாக பங்காற்ற முடிகிறது. இதேபோன்று, பவுலிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால், இந்தியா மற்றும் வெளிநாடு ஆகிய இரண்டிலும், இந்திய அணியை பாண்ட்யாவால் வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியும்" என்று தெரிவித்துள்ளார்.