கடைசியாக நியூசிலாந்து அணி இந்தியா வந்த போது, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாகவும், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்றும் இழந்தது. அதிலும் குறிப்பாக, கடைசி ஒருநாள் போட்டியில், அமித் மிஸ்ராவின் சுழலில் சிக்கி 79 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து. ஆனால், அதற்கு பின் இந்திய அணியின் கேப்டனும் மாறியாச்சு. யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் தரவரிசையில் முன்னேறி, எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றனர். இவையனைத்தையும் விட, ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டம் தான் ஹாட்.
இதுகுறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், "குல்தீப் மற்றும் சாஹல் இருவரும் மிகவும் திறமை வாய்ந்த பவுலர்கள். ஐபிஎல்-ல் தங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர்கள், இப்போது இந்திய அணிக்காக அசத்தி வருகின்றனர். மிகவும் வெற்றிகரமான பவுலர்களாக அவர்கள் வலம் வருகின்றனர். இத்தொடர் எங்களுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்றார்.
அஷ்வின் மற்றும் ஜடேஜா அணியில் இடம்பிடிக்காதது குறித்து பேசிய வில்லியம்சன், "இந்திய அணியில் மிகவும் தரம் வாய்ந்த பல வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதனால் தான் அணியின் முக்கிய பவுலர்களுக்கு தொடர்ந்து ஓய்வளிக்கப்பட்டு வருகிறது. எந்த வீரராலும், அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில், அந்தளவிற்கு நிறைய போட்டிகள் இருக்கும். இது இயற்கையானது தான், ஆனால் இந்திய அணி எப்போதும் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வலிமையான அணியாகவே இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும்" என்றார்.
தொடர்ந்து பேசிய நியூசிலாந்து கோச் மைக் ஹெசன், "குல்தீப் யாதவின் பந்துவீச்சை எங்கள் அணியில் உள்ள சில வீரர்கள் சிலமுறை எதிர்கொண்டிருக்கின்றனர். சில வீரர்கள், அவர் விளையாடிய கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணிக்காக இணைந்து ஆடியுள்ளனர். இதனால், குல்தீப் பற்றிய சில தகவல்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம்.
சில பேட்ஸ்மேன்கள், பந்துவீசும் பவுலரின் கையை பார்ப்பார்கள், சிலர் மணிக்கட்டை பார்ப்பார்கள், சிலர் பிட்சை கணித்துக் கொண்டிருப்பார்கள், சிலர் காற்றை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவரும் சில இடங்களில் வேறுபடுவார்கள். மணிக்கட்டு ஸ்பின்னர்களும் ரன்கள் குவிக்கும் வாய்ப்பை வழங்குவார்கள், இதனால், தேவையில்லாமல் பயப்பட்டு ஆடாமல், ஏதுவாக வரும் பந்தை அடித்து ஆடினால் அதுவே போதும்" என்றார்.
தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் பேசுகையில், "எங்கள் அணியின் சில வீரர்களுக்கு இங்கு முன்னதாகவே ஆடிய அனுபவம் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஆனாலும், இன்னும் நாங்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வரும் அக்., 17 மற்றும் 19-ஆம் தேதி நடக்கவிருக்கும் இரு பயிற்சி ஆட்டங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியமாகும்.
கடந்த இரு ஆண்டுகளாக ஹர்திக் பாண்ட்யா மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதை நாங்கள் ஐபிஎல்-ல் பார்த்தோம். அப்போது எங்கள் அணிக்காக அவர் சிறப்பாக பந்து வீசினார். இப்போது பேட் எடுத்துவந்து சிக்ஸர்கள் அடிக்கிறார். இவரைப் போல ஆல்ரவுண்டர்கள் கிடைத்தால், எந்த அணிக்கும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.