இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்த்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. நவம்பவர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 24-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறவுள்ளது.
வரும் 16-ம் தேதி கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த நிலையில், முதல் 2 டெஸ்ட்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான போட்டிகளில் ஹர்த்திக் பாண்டியா விளையாடுவதினால், அடுத்து வரும் தொடர்களில் பங்கேற்கும் வகையில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி : விராட் கோலி(கேப்டன்), கே.எல் ராகுல், முரளி விஜய், ஷிகர் தவான், சட்டீஸ்வர் புஜாரா, ரகானே(துணை-கேப்டன்), ரோகித் ஷர்மா, விரித்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முஹமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், இஷாந்த் ஷர்மா.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இலங்கை அணி, 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி ஆகிய தொடரில் பங்கேற்று விளையாடியது. 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும், 5-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும், 1-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் இந்திய அணி வென்று அசத்தியது. அப்போது, ஒரு வெற்றியை கூட பெறாமல் படுதோல்வியுடன் நாடு திரும்பிய இலங்கை அணி, தற்போது அதற்கு பழிதீர்க்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், தொடர்ந்து தொடர்களை கைப்பற்றி வரும் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்கொள்ள காத்திருக்கிறது.