அசத்தலான தனது விளாசல்கள் மூலம், 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில் கபில் தேவின் விளாசல்களை மீண்டும் நம் கண்முன்னே நிறுத்திச் சென்றுள்ளார் ஹர்மன்பிரீத் கவுர்!!
கடந்த 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நாம் யாரும் மறக்க முடியாது. உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை பற்றி பேச வைத்த தருணம். அந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று நம் நாட்டுக்கு பெருமை சேர்த்தது. இறுதி ஆட்டதில் இந்திய அணி மோதியது என்னவோ மேற்கிந்திய தீவுகள் அணியுடன் தான். ஆனால், லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே உடன் மோதிய போட்டி அனைவராலும் வெகுவாக பேசப்பட்டது.
அந்த போட்டியில் , அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் காண்பித்த வாணவேடிக்கைகள் இன்றளவும் கிரிக்கெட் ஆர்வலர்களால் பேசப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்த நிலையில், இந்திய அணி 17 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஐந்தாவதாக களமிறங்கிய கபில்தேவ், எதிரணியின் பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசித் தள்ளினார். ஆனால், அத்தகைய அற்புதமான இன்னிங்க்ஸ் குறித்த வீடியோ காட்சிகள் இல்லை. அன்றைய தினம் கபில் தேவின் அற்புத வாணவேடிக்கையை பார்க்காதவர்களின் ஏக்கத்தை, ஆஸ்திரேலிய அணியுடன் நேற்று நடைபெற்ற பெண்கள் உலக கோப்பை இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில், தனது விளாசல்கள் மூலம் போக்கிச் சென்றுள்ளார் ஹர்மன்பிரீத் கவுர்!!
பெண்கள் உலகக் கோப்பை இரண்டாவது அரை இறுதிச் சுற்றில் பலமிக்க நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொண்டது. மழை காரணமாக 42 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டிருந்தது.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் மந்தனா (6), ராவத் (14) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி, 9.2 ஓவர்களில் 35 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது, ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் இணை, ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. இந்திய அணி, 25-வது ஓவரில் 101 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, 61 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த மிதாலி ராஜ், ஆஸ்திரேலியாவின் பீம்ஸ் பந்து வீச்சில் அவுட்டானார்.
அதன் பிறகு தீப்தி ஷர்மாவுடன் இணைந்த கவுர், அபாரமாக விளையாடினார். 64 பந்துகளில் அரைசதம் கண்ட கவுர், 90 பந்துகளில் சதம் கண்டார். ஆஸ்திரேலிய வீராங்கனைகள் வீசிய பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் விளாசிய கவுர், அடுத்த 25 பந்துகளில் 71 ரன்களை விளாசித் தள்ளினார். 20 பவுண்டரிகள் ஏழு சிக்ஸர்கள் என 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார் ஹர்மன்பிரீத் கவுர். அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற கவுர் அடித்த ரன்களே பெருமளவு உதவி புரிந்தன.
தனது விளாசல்கள் மூலம் கபில்தேவின் ஆட்டத்தை நம் கண்முன்னே நிறுத்திச் சென்றதுடன், பல்வேறு சாதனைகளையும் ஹர்மன்பிரீத் கவுர் புரிந்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில் கவுர் இரண்டாது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் தீப்தி ஷர்மா முதலிடத்தில் உள்ளார். அயர்லாந்துக்கு எதிராக 188 ரன்கள் எடுத்து இந்த சாதனையை அவர் புரிந்துள்ளார்.
அது தவிர, பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் நான்காவது அதிகபட்ச ஸ்கோராக ஹர்மன்பிரீத் கவுர் எடுத்த ரன்கள் பதிவாகியுள்ளது. உலகக் கோப்பையில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கும் ஹர்மன்பிரீத் கவுர் சொந்தக்காரராகி உள்ளார்.
பஞ்சாப்பை சேர்ந்த 27 வயதான ஹர்மன்பிரீத் கவுர், கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டியில் முதன்முதலில் களமிறங்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை இங்கிலாந்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதன் முதலில் களமிறங்கினார். இவரது ரோல்மாடல் வீரேந்திர சேவாக்.
அரை இறுதி போட்டியில் அவரது ஆட்டத்தை பார்த்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், "வியத்தகு பேட்டிங் செய்துள்ளார் ஹர்மன்பிரீத் கவுர்" என புகழாரம் சூடியுள்ளார்.
"பெண்களின் ஆட்டத்தை பார்த்து பெருமிதம் கொள்கிறேன். ஹர்மன்பிரீத் கவுரின் விளாசல்கள் நினைவில் இருந்து நீங்காதவை" என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
"வாழ்நாளில் அற்புதமான ஒரு இன்னிங்க்ஸ். ஹர்மன்பிரீத் கவுரின் விளாசல்கள் அற்புதமானவை. அணியின் மொத்த ரன்களில் 60 சதவீதத்துக்கும் மேலானவை ஹர்மன்பிரீத் கவுர் எடுத்தவை" என சேவாக் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோஹ்லி, முன்னாள், இந்நாள் வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் ஹர்மன்பிரீத் கவுருக்கு புகழாரம் சூடி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.