தன் பெயரை 'கோயங்கா' கையாலேயே சரித்திரத்தில் எழுத வைத்த 'தல' தோனி !

இப்போ காட்டுக்கு யார் ராஜா என்று கோயங்காவிற்கு புரிந்திருக்கும்

வான்கடேவில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பிளேஆஃப் போட்டியில், புனே அணியின் தோனி 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு, 18-வது ஓவரில் வெறும் 120 ரன்கள் எடுத்திருந்த புனேவை, 162 ரன்களுக்கு கொண்டுச் சென்று கரை சேர்த்தார். பவுலிங்கில் வாஷிங்டன் சுந்தரும் அணிக்கு கைகொடுக்க, மும்பையை அந்த சொந்த மண்ணிலேயே அடக்கி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது புனே. இதனால், இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.

முன்னதாக, இந்த ஐபிஎல் தொடரில், புனே அணி இதே மும்பையை தனது முதல் போட்டியில் எதிர்கொண்ட போது, கடைசி ஓவரில் ஸ்மித் இரண்டு சிக்ஸர்கள் அடித்ததால், புனே வென்றது. அப்போட்டிக்கு பின் ட்வீட் செய்த புனே சூப்பர் ஜெயண்ட் அணியின் உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா, “காட்டுக்கு உண்மையில் யார் ராஜா? என்பதை ஸ்மித் இப்போது நிரூபித்துவிட்டார். தோனியை முற்றிலும் மறைத்துவிட்டார். ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது மிகப்பெரிய செயல்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று பிளேஆஃப் போட்டியில் பட்டையைக் கிளப்பிய தோனியின் ஆட்டத்தால், வெற்றிக்குப் பின் ட்வீட் செய்த கோயங்கா, “தோனியின் அதிரடியான பேட்டிங், சுந்தரின் அற்புதமான பவுலிங், ஸ்மித்தின் மிகச் சிறந்த கேப்டன்சி ஆகியவை புனேவை இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

தன் மீது எழும் விமர்சனங்களுக்கு வாயால் பதில் சொல்லாமல், ‘பேட்டால் மட்டுமே பதில் சொல்வேன்’ எனும் தோனி, ரியல் ‘தல’ தானே…!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close