நடப்பு கிரிக்கெட் டெஸ்ட் தொடரை இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான போட்டியாக சொல்வதைவிட இந்திய வீரர் அஸ்வினுக்கும், இலங்கை வீரர் ரங்கனா ஹெராத்துக்கும் இடையிலான யுத்தமாக வர்ணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இலங்கை மைதானங்கள் பேட்டிங்கிற்கும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சொர்க்கபுரி! எனவே இந்தியா 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் அஸ்வினையும், ரவீந்திர ஜடேஜாவையும் பெரிதும் நம்பியிருக்கிறது.
ஜூலை 26-ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கிய காலே மைதானத்தில், போட்டியின் 3-வது நாளிலிருந்து பந்துகள் தாறுமாறாக சுழலும். எனவே 3 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனாலும் அஸ்வின் - ஜடேஜா இணை மீது வைத்த நம்பிக்கை காரணமாக சைனாமேன் ஸ்பின்னரான குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டார்.
எனவே அஸ்வின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. ஆனால் அஸ்வினுக்கு எல்லா வகையிலும் ஈடுகொடுக்கக் கூடியவராக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கணா ஹெராத் இருப்பதையும் மறந்துவிட முடியாது. ஹெராத்தின் பந்துவீச்சு புள்ளி விவரங்களே இதற்கு சாட்சி!
கடந்த 2011 முதல் டெஸ்ட் அரங்கில் விளையாடி வரும் அஸ்வின், 49 டெஸ்ட்களில் 275 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். சரியாக அதே காலகட்டத்தில் விளையாட ஆரம்பித்த ஹெராத்தும் 49 டெஸ்ட்களையே முடித்திருக்கிறார். விக்கெட் எண்ணிக்கையில் அஸ்வினைவிட ஒரே ஒரு விக்கெட்தான் குறைவாக (274) பெற்றிருக்கிறார் ஹெராத்.
எனவே இலங்கையில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் முந்திக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. வேறு சில புள்ளிவிவர அம்சங்களும் இவர்களுக்கு இடையே ஒற்றுமையை பறைசாற்றுகின்றன.
அஸ்வினின் விக்கெட் சராசரி 25.22! அதாவது, 25.22 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற விகிதத்தில் அஸ்வினின் பந்துவீச்சு சராசரி அமைந்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஹெராத் 24.82 என்ற விகிதாச்சாரத்துடன் அஸ்வினைவிட சற்று மேலோங்கி நிற்கிறார். ஆனால் அஸ்வின் ‘ஸ்டிரைக் ரேட்’டில் ஹெராத்தை முந்துகிறார். அதாவது அஸ்வின் 52.51 ரன்களுக்கு ஒரு விக்கெட் வீழ்த்தியிருக்கும் நிலையில், ஹெராத் 54.58 ரன்களுக்கே ஒரு விக்கெட்டை எடுத்திருக்கிறார்.
அடுத்தபடியாக 49 டெஸ்ட் போட்டிகளில் இருவருமே மிகச்சரியாக 25 முறை தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் ஹெராத் 9 டெஸ்ட்களில் தலா 10 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். அஸ்வின் இந்த சாதனையை 7 முறையே படைத்திருக்கிறார். அஸ்வினுக்கு (30), ஹெராத்தைவிட (40) வயது 10 ஆண்டுகள் குறைவு என்பதுதான் பெரிய பலம்! எனவே அஸ்வினின் சாதனை இன்னும் உயரும்.
இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால் ஓய்வில் இருப்பதால், ஹெராத் கேப்டன் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். எனவே இந்தத் தொடரில் முழுத் திறமையையும் அவர் காண்பிக்க விரும்புவார். அஸ்வினுக்கு கடும் போட்டி காத்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.