முதலாவது தென்னிந்திய ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் ராமநாதபுரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) வேலு மாணிக்கம் ஆஸ்ட்ரோ டர்ஃப் ஹாக்கி மைதானத்தில் இன்று முதல் தொடங்கியது. வருகிற 26ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இன்று பிற்பகல் நடந்த ஆட்டத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் தொடக்க முதலே தமிழக அணி ஆதிக்கம் செலுத்தியது. தமிழக அணியின் வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து மிரட்டினர். இறுதியில், ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு அணி 10 - 0 என்ற கோல் கணக்கில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது.
தமிழக அணி தரப்பில் ஆனந்த் 4 கோல்களையும், ஸ்ரீனிவாசன் மற்றும் ராகேஷ் தலா 2 கோல்களையும், லோகேஸ்வரன் போத்தீஸ் மற்றும் ஹரிகரன் தலா ஒரு கோலையும் அடித்து அசத்தினர். வேல் ராகவன் ஆட்டநாயகன் தேர்வு செய்யப்பட்டார்.