ச.மார்ட்டின் ஜெயராஜ் – ராமநாதபுரம் மாவட்டம்
Ramanathapuram, Hockey India Junior Men and women south zone Championship 2023 Tamil News: ‘ஹாக்கி இந்தியா’ நடத்தும் முதலாவது தென்னிந்திய ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் ராமநாதபுரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) வேலு மாணிக்கம் ஆஸ்ட்ரோ டர்ஃப் ஹாக்கி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை (மார்ச் 20) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை நடந்த லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜூனியர் மகளிர் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் தமிழக அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. தமிழக அணியின் பிரியா தர்சினி அடுத்தடுத்து கோல்களை அடித்து மிரட்டினார். ஹாட்ரிக் கோல் அடித்த அவர் போட்டியில் மொத்தமாக 6 கோல்களை பதிவு செய்து அசத்தினார். இதேபோல் அணியின் கேப்டன் கோபிகா 4 கோல்களை பதிவு செய்தார்.

முதல் பாதியில் கோல் அடிக்க தடுமாறிய புதுச்சேரி அணி 2ம் பாதியிலும் அதே ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இறுதியில், ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு அணி 17 கோல்களை அடித்து அசத்தியது. இந்த மிரட்டல் ஆட்டத்தின் மூலம் புதுச்சேரியை 17- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. வருகிற ஞாயிற்றுகிழமை (மார்ச் 26ம் தேதி) நடக்கும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதற்கு முன்னதாக, வருகிற சனிக்கிழமை இவ்விரு அணிகளும் லீக் ஆட்டத்தில் மல்லுக்கட்டுகின்றன. தொடரில் இந்த 2 அணிகள் தான் வலுவான அணிகளாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
‘கோப்பையை வெல்வோம்’ – கேப்டன், பயிற்சியாளர் நம்பிக்கை
தமிழ்நாடு ஜூனியர் மகளிர் அணியின் கேப்டன் கோபிகா நம்மிடம் பேசுகையில், “போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். சொந்த மாநிலத்தில் போட்டிகள் நடப்பதால் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர். ‘ஹாக்கி இந்தியா’ -வின் இந்த புதிய முயற்சி சக வீராங்கனைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியைப் பதிவு செய்து கோப்பையை வெல்வோம்.” என்று கூறினார்.

“உலகக் கோப்பை போட்டிகள் போன்று தொடர் நடக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒருவருக்கு ‘பெஸ்ட் பிளேயர் அவார்ட்’ வழங்கப்படுகிறது. அதனால், இது போன்ற போட்டிகள் வளர்ந்து வரும் இளம் வீரர் – வீராங்கனைகளுக்கு சிறந்த தளமாக இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் ஹாக்கி விளையாட்டு உலகில் நல்ல வெளிச்சத்தை பெறுகிறார்கள்.
மண்டல வாரியாக போட்டிகளை நடத்தி அதிலிருந்து சிறந்த வீராங்கனைகளை தேர்வு செய்யும் முறையால், பலருக்கும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக, தென்னிந்தியாவில் இருந்து நிறைய பேர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள். ‘ஹாக்கி இந்தியா’-வின் இந்த முயற்சி பாராட்டுக்குறியது.” என்று கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் களமாடும் தமிழ்நாடு ஜூனியர் மகளிர் அணியை ஆயத்தம் செய்து வரும் பயிற்சியாளர் கிறிஸ்டி எலெனா எட்வர்ட் கூறினார்.

மேலும் நம்மிடம் பேசிய அவர், “லீக் போட்டிகளில் நமது அணி வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு வருகிறார்கள். எனவே, இறுதிப்போட்டியிலும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறோம்.” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil