ஜூனியர் ஹாக்கி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு: “பதிலடி கொடுக்க வெயிட்டிங்” – பயிற்சியாளர் அரவிந்த்

திருநெல்வேலியில் தனது ஹாக்கி பயணத்தை தொடங்கிய பயிற்சியாளர் அரவிந்தன் மாநில மற்றும் தேசிய அணிகளில் இளம் வீரராக விளையாடி இருக்கிறார்.

Hockey, Tamilnadu Junior men coach Aravindhan interview in tamil
In conversation with Hockey Unit of Tamilnadu Men coach Aravindhan Tamil News

ச.மார்ட்டின் ஜெயராஜ் – ராமநாதபுரம் மாவட்டம்

Ramanathapuram, Hockey India Junior Men and women south zone Championship 2023 Tamil News: களத்தில் அணியை நேர்த்தியாக வழிநடத்த ‘கேப்டன்’ எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு களத்திற்கு வெளியில் இருந்து அவர்களை இயக்கவும், களம்காணும் முன் அவர்களை ஆயத்தம் செய்வதிலும், நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பதிலும் அணியின் பயிற்சியாளர்கள் பெரும் பங்காற்றுகிறார்கள். அவ்வகையில், ராமநாதபுரம் மண்ணில் நடந்து வரும் முதலாவது தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு ஆடவர் அணியை தனது சீறிய பயிற்சியால் இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துள்ளார் பயிற்சியாளர் அரவிந்தன்.

தமிழ்நாடு அணியின் இளம் வீரர்களை திறம்பட மேம்படுத்தி வரும் அவர் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவர்களின் அசைவுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார். போட்டி நேரத்தில் அவர் செலுத்தும் கூடுதல் கவனம் இளம் வீரர்கள் அசாத்தியமான கோல்களை பதிவு செய்ய உதவுகிறது. எப்போதும் சுறுசுறுப்பாய், இங்கும் அங்கும் நகர்ந்து கொண்டே இருந்த அவரை நேரில் சந்தித்து பேசினோம்.

தமிழ்நாடு ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணி பயிற்சியாளர் அரவிந்தன்</strong>

அவர் ‘ஹாக்கி இந்தியா’ நடத்தும் முதலாவது தென்னிந்திய ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் விளையாடி வரும் தமிழ்நாடு இளம் அணி பற்றி நம்மிடம் விவரிக்க தொடங்கினர். “இந்த போட்டிக்கு 26 இளம் வீரர்கள் கொண்ட அணியை நாங்கள் (ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு) தேர்வு செய்தோம். அவர்களுக்கான பயிற்சி முகாமை இங்கு (ராமநாதபுரத்தில்) மார்ச் 1ம் தேதி முதல் தொடங்கி நடத்தினோம். 3 வார தொடர் பயிற்சிக்குப் பிறகு, கோவில்பட்டியில் உள்ள செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (SHE) எஸ்.டி.ஏ.டி (SDAT) அணியுடன் ஒரு வார பயிற்சி ஆட்டத்திற்காக சென்று இருந்தோம். அதன்பின்னர் நேரடியாக இங்கு போட்டியில் விளையாட வந்து சேர்ந்தோம்.” என்றார்.

பயிற்சியாளர் அரவிந்தன் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த ஹாக்கி வீரர்களில் ஒருவர். திருநெல்வேலியில் தனது ஹாக்கி பயணத்தை தொடங்கிய அவர் மாநில மற்றும் தேசிய அணிகளில் இளம் வீரராக விளையாடி இருக்கிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை பயின்ற அவர் சென்னை பல்கலைக்கழக (university of madras) ஹாக்கி அணியில் முன்னணி வீரராக களமாடி அகில இந்திய பல்கலைக்கழக அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் விளையாடியுள்ளார். தமிழ்நாடு சீனியர் அணியை தொடர்ந்து 4 ஆண்டுகள் கேப்டனாக வழிநடத்தியும் உள்ளார். முருகப்பா கோல்டன் கப், நேரு கோல்டன் கப், பைட்டன் கப் உள்ளிட்ட பிரபலமான ஹாக்கி கோப்பை தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

2010 ஆம் ஆண்டு அகில இந்திய பல்கலைக்கழக அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சென்னை பல்கலைக்கழகம் அணி வெண்கல பதக்கம் வென்றது. அந்த அணியை வழிநடத்திய அரவிந்தன் 2012 ஆம் ஆண்டில் தெற்கு ரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் (Sports Quota) பணியமர்ந்தார். தொடர்ந்து ஹாக்கி மட்டையுடன் வலம் வந்த அவர் 2020 -21 ஆம் ஆண்டு பெங்களுருவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் (Netaji Subhas National Institute of Sports – என்.ஐ.எஸ்) ஹாக்கி விளையாட்டு பயிற்சிக்கான சான்றிதழ் படிப்பை படித்து, தற்போது இளம் வீரர்களை பட்டை தீட்டி வருகிறார்.

கர்நாடகா அணிக்கு எதிராக நாளை (ஞாயிற்றுகிழமை) நடக்கவிருக்கும் இறுதிப் போட்டிக்கான திட்டங்கள் குறித்து அவரிடம் கேட்ட போது, “இறுதிப் போட்டிக்கு 3-4-3 ஃபார்மேஷனில் ஆட திட்டமிட்டுள்ளோம். ட்ரக் ஃப்க்ளிக்கில் சிறிய சிறிய தவறுகளை தவிர்க்க பயிற்சி செய்துள்ளோம். ட்ரக் ஃப்க்ளிக் பயன்படுத்தி இன்னும் கோல்களை கூடுதலாக அடிக்க கடுமையாக முயற்சிப்போம். லீக் போட்டியில் 4-2 என்ற கணக்கில் கர்நாடகா அணியிடம் சிறிய தோல்வியை சந்தித்தோம். அதற்கு இந்த இறுதிப் போட்டியில் பதிலடி கொடுக்க காத்திருக்கிறோம். கோப்பையை வெல்வோம் எனவும் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

நாளை மதியம் 2 மணிக்கு தொடங்கும் ஜூனியர் மகளிருக்கான இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகளும், மாலை 4 மணிக்கு தொடங்கும் ஆடவருக்கான இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Hockey tamilnadu junior men coach aravindhan interview in tamil

Exit mobile version