Hockey World Cup 2023 – Nilam Sanjeep Xess Tamil News: 15 வது ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் நாளை (ஜனவரி 13-ம் தேதி) முதல் தொடங்குகிறது. வருகிற 29 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த போட்டிகள் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் நகரங்களில் உள்ள பிர்சா முண்டா பன்னாட்டு ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் கலிங்கா விளையாட்டு அரங்கங்களில் அரங்கேறுகிறது. இந்தப் போட்டிக்காக ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
நாளை இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது ஒடிசாவின் ‘இரும்பு நகரம்’ என்று அழைக்கப்படும் ரூர்கேலா நகரில் உள்ள பிர்சா முண்டா பன்னாட்டு ஹாக்கி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமாட இருக்கிறார் ரூர்கேலா மண்ணின் மைந்தன் ‘நிலம் சஞ்சீப் ஜெஸ்’. மின் விளக்கு இல்லாத கிராமத்தில் வளர்ந்த அவர், 21 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும், ஃப்ளட் லைட்களால் மின்னும் பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியத்திற்குள் இந்திய வீரராக அடியெடுத்து வைக்கிறார்.
ஆம், ஜெஸ் மின்சாரம் இல்லாத கிராமத்தில் வளர்ந்தவர் தான். அவரது கிராமத்திற்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மின்சாரம் கிடைத்தது. இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த அவர் சிறுவயதில் தனது பெற்றோருக்கு சொந்தமான சிறிய விவசாய பண்ணையில் காய்கறிகள் – உருளைக்கிழங்கு மற்றும் காலிஃபிளவர் பறிக்க உதவினார்.
இந்திய எக்ஸ்பிரஸ் இதழிடம் பேசிய நிலம் ஜெஸ், “சில நேரங்களில், என் கதையைச் சொல்ல நான் வெட்கப்படுகிறேன்,” என்று கூறுகிறார். பின்னர், நீண்ட இடைநிறுத்தத்திற்குப் பிறகு, அவர் “ஆனால் நான் அதைத் திரும்பிப் பார்த்து, ‘ஆஹா, நான் இதுவரை வந்துவிட்டேனே’ என்று நினைக்கிறேன்.” என்கிறார்.
இந்தியா – ஸ்பெயின் அணிகள் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் மற்றும் ரூர்கேலாவில் நடக்கவிருக்கும் மற்ற அனைத்து உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. இதுபற்றி உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள் ஹாக்கி விளையாட்டின் மீதான காதல் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் மண்ணின் மைந்தனின் ஆட்டத்தைக் காணவும் ஆவல் கொண்டுள்ளனர்.’ என்றும் அவர் கூறினார்.
ஜெஸ்ஸின் ஹாக்கி கதை ரூர்கேலாவின் அருகேயுள்ள உள்ள கடோபஹால் என்ற கிராமத்தில் தூசி நிறைந்த மற்றும் வெளிர் பழுப்பு நிற மைதானத்தில் தொடங்கியது. அதிநவீன விளையாட்டு அரங்கம் போலல்லாமல், இந்த வறண்ட கிராமத்தில் உள்ள உள்ளூர் மைதானம், பிர்சா முண்டா ஸ்டேடியத்தின் கொள்ளளவை விட குறைவான மக்கள் தொகை கொண்டது. இங்கு கிழிந்த வலைகளுடன் இரண்டு பாழடைந்த கோல்போஸ்டுகள் உள்ளன. இரண்டு மூங்கில் கம்பங்களுக்கு இடையில் ஒரு பெரிய, உடைந்த வலை வைக்கப்பட்டுள்ளது. இது அருகிலுள்ள சாலையில் பந்து வாகனங்களில் மோதுவதைத் தடுக்கிறது.

ஜெஸ் முதன்முதலில் இந்த மைதானத்தில் அடியெடுத்து வைத்தபோது அவருக்கு ஏறக்குறைய ஏழு வயது இருக்கும். “பள்ளியில் இடைவேளையின் போது என் சகோதரனுடன் விளையாடினேன். வீட்டிற்கு வந்த பிறகு, நான் என் பெற்றோருக்கு பண்ணையில் உதவுவேன், மாலையில், கிராமத்தில் உள்ளவர்கள் ஹாக்கி விளையாட்டிற்காக சந்திப்பார்கள். நான் அவர்களுடன் சேர்ந்துகொண்டேன்,” என்று அவர் கூறுகிறார்.
“எதுவும் நடக்காத” இடத்தில் தனது பொழுதுபோக்கிற்காக ஜெஸ் ஹாக்கி விளையாட தொடங்கினார். மைக்கேல் கிண்டோ, திலீப் டிர்கி, லாசரஸ் பர்லா மற்றும் பிரபோத் டிர்கி ஆகியோரைப் போல் “எல்லோரும் முன்னோக்கி விளையாடி கோல் அடிக்க” விரும்பியதால் அவரும் ஒரு டிஃபெண்டர் ஆனார். இருப்பினும், ஜெஸ் அந்த நேரத்தில் அந்த பழங்குடி இன வீரர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை. மேலும், இந்தியாவுக்காக தான் விளையாடுவதையும் அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
“பெரிய கனவு காண்பவர்களுக்கான கடோபஹல் சரியான இடம் அல்ல. அங்கு தற்போது மின்சாரம் கூட இல்லை. ரூர்கேலாவில் என்ன நடக்கிறது என்று கூட எனக்குத் தெரியவில்லை.” என்று கூறுகிறார்.
அவரது தந்தை பிபின் கூறும்போது, “நாங்கள் மின்வெட்டு என்று சொல்லவில்லை. இங்கு மின்சாரமே இல்லை என்று தான் சொல்கிறோம். 2017-ல் தான் மின்சாரம் கிடைக்க ஆரம்பித்து. அதற்கு முன்பு வரை நாங்கள் முழு இருளில்தான் வாழ்ந்தோம்.
சமாளிப்பதற்கான நுணுக்கங்கள் மற்றும் டிஃபென்ஸ் ஆட தேவையான திறன்களை ஜெஸ் தடையின்றி கற்க “திபரிஸ்” (எண்ணெய் விளக்குகள்) செய்யும் கலையில் ஈடுபட்டும் இருக்கிறார். “எங்களால் ஒரு விளக்கு வாங்க முடியவில்லை. ஆனால் வீட்டில் சிறிய கொள்கலன்கள் இருந்தன. அவை காலியானவுடன், நாங்கள் அவற்றைக் கழுவி முழுமையாக உலர விடுவோம். பிறகு, ஒரு சிறிய துளை செய்து, அதில் சிறிது சேற்றை அடைத்து, சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி அதை எரிய வைத்தோம். நாங்கள் எங்கள் இரவுகளை அப்படித்தான் கழித்தோம்.
அந்த நாட்களில், ஜேஸ் தனது படிப்பை முடித்து “மரியாதைக்குரிய வேலை” பெற வேண்டும் என்று நம்பினோம். ஹாக்கி ஒரு பொழுது போக்கு, அதற்கு மேல் எதுவும் இல்லை.”என்று ஜெஸ்ஸின் தந்தை பிபின் கூறுகிறார்.

ஆனால் 2010ல் சுந்தர்காரில் உள்ள விளையாட்டு விடுதிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அது ற்றிலும் மாறிப்போனது . “அப்போதுதான் ஹாக்கி விளையாடி பணம் சம்பாதிக்க முடியும் என்று தெரிந்து கொண்டேன். நீங்கள் மரியாதை சம்பாதிக்கிறீர்கள். அதனால் வீரராக வருவதற்கு கடுமையாக உழைத்தேன். அதன் பிறகு, 2012ல் லண்டன் ஒலிம்பிக்கைப் பார்த்தபோது, இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற இலக்கை நானே நிர்ணயித்தேன்,” என்று ஜெஸ் கூறுகிறார், அவருடைய ஹாக்கி ஸ்டிக்குகளை வாங்குவதற்கும் மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவரது பெற்றோர் கடன் வாங்கினர்.
ஒரு உள்ளூர் பயிற்சியாளர், தேஜ் குமார் ஜெஸ் , அவருக்கு டிஃபென்ஸ் கலையை கற்றுக் கொடுத்தார். அவர் தனது முதல் தேசிய முகாமுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மற்றொரு ஹாக்கி நட்சத்திரமான பிரேந்திர லக்ரா – அவரைத் தன் சிறகுகளின் கீழ் அழைத்துச் சென்றார். “அவர் என்னை தனது சகோதரனாகப் பார்த்தார், இன்று எனக்குத் தெரிந்த பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்: சமாளித்தல், நிலைநிறுத்துதல், களத்தில் உள்ள அழுத்த சூழ்நிலைகளில் இருந்து எப்படி பதுங்கிக் கொள்வது…”
இந்த குணாதிசயங்கள் இப்போது ஜெஸ்ஸை வரையறுத்துள்ளன. அவரது நிலைப்பாடு, மென்மையான சமாளிப்பு மற்றும் இறுக்கமான சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பது போன்ற உணர்வுகளால் ஆபத்தைத் தடுக்கும் திறன். ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா, தந்திரமான ஸ்பெயினுக்கு எதிராக தங்கள் தொடக்க ஆட்டத்தை ஆடும் போது ஜெஸிஸின் இந்தப் பண்புகள்தான் கை கொடுக்கும்.
.நாளை ஸ்டாண்டில் குவிந்து இருக்கும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களில், ஜெஸ்ஸின் பெற்றோரும் இருப்பார்கள். “அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழும் நீங்கள் எப்படி உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கனவு கண்டீர்கள்?” என்று பிபின் கேட்கிறார். அதற்கு அவரது மனைவியும் ஜெஸ்ஸின் தாயுமான ஜிரா, “ஆனால், அந்த மிகப்பெரிய போட்டி இப்போது எங்கள் சொந்த மண்ணில் நடக்கிறது, எங்கள் மகன் அதில் விளையாடுகிறான், நாங்கள் அதை எப்படி இழக்க முடியும்?” கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil