Hockey World Cup 2023 – Odisha – Pakistan Tamil News: 15-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் நடந்து வருகிறது. இதில், மொத்தமாக 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. ஆனால், நமது அண்டை நாடான பாகிஸ்தான் இந்த தொடரில் பங்கேற்றவில்லை. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கான காரணம் தான் என்ன?, பாகிஸ்தான் ஹாக்கி அணியின் வரலாறு? போன்றவை குறித்து இங்கு பார்க்கலாம்.
பாகிஸ்தான் ஹாக்கி வரலாறு
பாகிஸ்தான் ஒரு காலத்தில் ஃபீல்டு ஹாக்கியில் கொடி கட்டி பறந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, 1948 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (FIH) உறுப்பினராக இணைந்தது. 1958ல் உருவாக்கப்பட்ட ஆசிய ஹாக்கி சம்மேளனத்தின் (ASHF) நிறுவன உறுப்பினராகவும் இருக்கிறது. இத்தகைய நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட பாகிஸ்தான் அணி நான்கு ஹாக்கி உலகக் கோப்பை வெற்றிகளுடன் (1971, 1978, 1982, மற்றும் 1994 இல்) சாதனை படைத்த உலகின் மிக வெற்றிகரமான தேசிய பீல்ட் ஹாக்கி அணிகளில் ஒன்றாகவும் உள்ளது. தவிர, பாகிஸ்தான் பல ஒலிம்பிக் பதக்கங்களையும் வென்ற அணியாகவும் உள்ளது (1956 – வெள்ளி, 1960 – தங்கம்).

இருப்பினும், 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற அந்த அணி தவறி வருகிறது. குறிப்பாக, 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் போனதால் விஷயங்கள் கடுமையாக மாறிப்போனது. தற்போது மீண்டும் நடப்பு சீசனில் பாகிஸ்தான் தகுதி பெறத் தவறி, இரண்டாவது முறையாக வெளியேறியுள்ளது. இது ஹாக்கியை தொடர்ந்து பின்பற்றி வரும் உலக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியும், அதிர்ச்சி கொடுத்தும் இருக்கிறது.
பாகிஸ்தான் ஹாக்கியின் வீழ்ச்சிக்கான காரணிகள்
செயற்கை புல்லுக்கு மாறியது
1980 களின் பிற்பகுதியில், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு ஹாக்கியை இயற்கையிலிருந்து செயற்கை புல்தரைக்கு மாற்ற முடிவு செய்தது. இந்த நடவடிக்கை இந்தியாவையும் பாகிஸ்தானையும் மோசமாகப் பாதித்தது. இரு அணிகளும் செயற்கை புல்தரையில் விளையாடுவதற்குப் பழக்கமில்லை. மேலும் இந்திய ஹாக்கியின் வீழ்ச்சி பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பே தொடங்கி இருந்தது. இந்தியா 1982 பதிப்பில் 5 வது இடத்தைப் பிடித்தது. அதன் பிறகு அடுத்தடுத்த பதிப்புகளில் அந்த இடத்தைக் கூட பெற முடியவில்லை.
1986 பதிப்பில் பாகிஸ்தான் ஆஸ்ட்ரோடர்ஃப் மேற்பரப்பில் விளையாடுவதற்கு கடினமாக இருந்ததால் ஒரே ஒரு குழு போட்டியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆசியா அணிகளின் வீழ்ச்சியால் ஐரோப்பிய அணிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். மேலும் முன்னாள் உடற்பயிற்சி நிலைகள், பயிற்சி ஆகியவற்றை மேம்படுத்தினர்.

முறையான கூட்டமைப்பு ஆதரவு இல்லாதது
கடந்த சில ஆண்டுகளில் இரண்டு வெளிநாட்டு பயிற்சியாளர்களின் (ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் மற்றும் சீக்ஃபிரைட் ஐக்மேன்) முறையற்ற செயல்பாடு மற்றும் சம்பள கடன் காரணமாக பயிற்சி அமைப்பை விட்டு வெளியேறினர். சீக்ஃபிரைட் ஐக்மேன் 2022ல் பயிற்சி அமைப்பை விட்டு வெளியேறினார். அதே நேரத்தில் முன்னாள் இந்திய பயிற்சியாளரான ஓல்ட்மன்ஸ் 2019ல் வெளியேறினார்.
உள்கட்டமைப்பு இல்லாமை
கடந்த காலங்களில் பல சர்வதேச வல்லுநர்கள் பாகிஸ்தானின் உள்கட்டமைப்பு பற்றாக்குறையை விவரித்துள்ளனர். இது அந்த அணியின் சரிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். கடந்த காலங்களில் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ஹாக்கியை ஆதரித்தன. ஆனால் சமீப காலங்களில் ஆதரவு அதிக விகிதத்தில் குறைந்துள்ளது. சமீபத்தில் அங்குள்ள ஒரு ஹாக்கி ஸ்டேடியத்தில் ஒரு விழாவை நடத்தப்பட்டது. இது பல ஹாக்கி வீரர்களுக்கு அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியது. மேலும், ஹாக்கி மைதானங்கள் இப்போதெல்லாம் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக மற்ற சீரற்ற பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

பாகிஸ்தான் ஏன் 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை?
ஆசியக் கோப்பை உலகக் கோப்பைக்கான கடைசித் தகுதிச் சுற்றுப் போட்டியாகும். இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதி பெறும். பாகிஸ்தானால் முதல் நான்கு இடங்களுக்குள் செல்ல முடியவில்லை, இதன் மூலம் அந்த அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியா நிலை ஏற்பட்டது. இந்த தொடரில் ஏ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பிடித்த நிலையில், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக டிரா (1-1) மற்றும் குழு நிலைகளில் இந்தோனேசியாவை (13-0) தோற்கடித்தது. ஆனாலும் அந்த அணியால் தகுதி பெற முடியவில்லை.
தற்போது தென் கொரியா, ஜப்பான் மற்றும் மலேசியா போன்ற அணிகள் பாகிஸ்தான் விட்டுச் சென்ற இடைவெளியை நிரப்பியுள்ளன மற்றும் ஆசிய அளவில் ஆதிக்கம் செலுத்தவும் தொடங்கியுள்ளன. ஆனால் உலக அளவில் நிலைத்தன்மையைக் காட்டுவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளன. தற்போதைய புரோ லீக்கில் இந்தியா (ஆண்கள்) மற்றும் சீனா (பெண்கள்) மட்டுமே விளையாட உள்ளன. எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பையில் இந்திய மகளிர் அணி ஸ்பெயினை வீழ்த்தி 2023-24 புரோ லீக் பதிப்பில் இடம் பிடித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil