ANBARASAN GNANAMANI
கடந்த 6ம் தேதி நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி 174 ரன்கள் எடுத்தும் தோற்றது, ரசிகர்களுக்கு மட்டுமில்லாது, கேப்டன் ரோஹித்துக்கும் அதிர்ச்சி தான். அதை சரி செய்யும் விதத்தில் தற்போது நடந்து முடிந்துள்ள வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடியுள்ளதா? என்று பார்த்தோமேயானால், சற்றே யோசிக்க வேண்டியதுள்ளது.
முதல் போட்டி நடந்த அதே கொழும்பு மைதானம். இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. முதல் போட்டியில் விளையாடிய அதே அணி தான். டாஸ் வென்ற ரோஹித், வங்கதேசத்தை பேட்டிங் செய்ய அழைக்க, அந்த அணியின் தொடக்க வீரர்களான தமிம் இக்பால் மற்றும் சௌமியா சர்கர் களமிறங்கினர்.
இந்திய வீரர்கள் சாப்பிட்டுவிட்டு கை கழுவ மறந்துவிட்டனர் போல.. முதல் ஓவரில் இருந்தே கேட்ச்களை விடத் தொடங்கினர். கிட்டத்தட்ட ஐந்து கேட்ச்களை கோட்டை விட்டனர். இதில், ஆச்சர்யம் என்னவெனில், ரெய்னா, ரோஹித் போன்ற சிறப்பான ஃபீல்டர்கள் கூட கேட்சை நழுவ விட்டதே!. இப்படி ஐந்து கேட்சை விட்டுமே வங்கதேசத்தால் 20 ஓவர்களில் 139 ரன்களே எடுக்க முடிந்தது.
கிரிக்கெட்டில் இன்று அபரிதமான வளர்ச்சியை அடைந்துள்ள கத்துக்குட்டி அணி வங்கதேசம். இந்த முத்தரப்பு டி20 தொடரில் கூட, முழு பலம் கொண்ட அணியையே வங்கதேசம் நிர்வாகம் இலங்கை கொண்டுவந்தது. ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் மட்டுமே இதில் மிஸ்ஸிங். அவரைத் தவிர, அனைத்து வீரர்களும் டாப் பெர்ஃபாமர்களே. இருந்தும் அந்த அணி, 139 ரன்களில் முடங்கியது அவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்திருக்கும்.
லிட்டன் தாஸ் மற்றும் 'வங்கதேச டி வில்லியர்ஸ்' சபீர் ரஹ்மான் முறையே 34 மற்றும் 30 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்களில் எவரும் 20 ரன்னைக் கூட தொடவில்லை. நிச்சயம் இது வங்கதேச நிர்வாகத்திற்கு ஏமாற்றம் தான்!.
இந்திய பவுலிங்கை பொறுத்தவரை, ஜெயதேவ் உனட்கட் 4 ஓவர்கள் வீசி, 38 ரன்கள் விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் எடுத்த 3 விக்கெட்டுகளுக்கு திருப்தி அடைவதா?, அல்லது அவர் கொடுத்த 38 ரன்களுக்கு வருத்தப்படுவதா? என தெரியவில்லை. அந்த அணியின் மொத்த ஸ்கோரில் மூன்றில் ஒரு பங்கை இவரே கொடுத்துவிட்டார். (இன்னும் எதிர்பார்க்குறோம் உனட்கட் அவர்களே! காஸ்ட்லி இந்திய ஐபிஎல் பிளேயரான உங்களை, ஐபிஎல், கமான்! கமான்! என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது).
மற்ற பவுலர்களில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் 'டேஞ்சர் மேன்' முஷ்பிகுர் ரஹீமை 18 ரன்னிலும், கேப்டன் மஹ்மதுல்லாவை 1 ரன்னில் வெளியேற்றினார். வங்கதேசத்தின் முதுகெலும்பை அடுத்தடுத்து காலி செய்தார். இதனால் தான் அந்த அணி 30 ரன்கள் குறைவாக எடுத்தது. இதற்கு பரிசாகவே, 'ஆட்ட நாயகன்' விருதை விஜய் ஷங்கர் வென்றார்.
மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் என்று, ஒகே ரகத்தில் பந்து வீசினார். கடந்த ஆட்டத்தில் குஷல் பெரேராவிடம் சிக்கி சின்னாபின்னமான ஷர்துள் தாகுர், இப்போட்டியில் தனது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டார். 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இந்திய அணியின் 'செல்லம்', ரவி சாஸ்திரியின் 'கண்டுபிடிப்பு' யுவேந்திர சாஹல், 4 ஓவர்களில் சிக்கனம் காட்டி 19 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
ஆனால், பேட்டிங்கில் சோடை போன வங்கதேசம், பவுலிங்கில் 'பக்கா' மெச்சூரிட்டியுடன் செயல்பட்டது. நமது பேட்ஸ்மேன்களுக்கு வீசிய பெரும்பாலான பந்துகள் ஸ்டம்ப்பை நோக்கியே இருந்தன.
இம்முறையும், தனது வழக்கமான 'ஏனோ தானோ' ஸ்டைலோடு கணக்கை தொடங்கிய ரோஹித் ஷர்மா, 17 ரன்னில் முஸ்தாபிசூர் ரஹ்மான் ஓவரில் இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டெம்ப்புகளை பறிகொடுத்தார். இலங்கைக்கு எதிராக முதல் ஆட்டத்தில் அதிரடி காட்டிய தவான், இப்போட்டியிலும், தனது சிறப்பான ஃ பார்மை கண்டினியூ செய்து, அவ்வப்போது பவுண்டரிகளை முத்தமிட்டுக் கொண்டிருந்தார்.
வங்கதேசத்தின் பவுலிங் உண்மையில் நமக்கு ஆச்சர்யத்தையே கொடுத்தது. எந்த இடத்திலும், அவர்கள் தேவையில்லாத பந்துகளையோ, பீல்டரை ஒரு இடத்தில் செட் செய்துவிட்டு, பந்தை வேறு பக்கம் வீசும் காமெடியையோ செய்யவில்லை. என்னவொரு முன்னேற்றம் வங்கதேச பந்து வீச்சில்!
ரோஹித் வெளியேறிய பின், கடந்த ஆட்டத்தில் சொதப்பிய ரிஷப் பண்ட்டிற்கு ஒன் டவுன் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதிரடி வீரரான ரிஷப்பிற்கு இப்போட்டியில் லக் அமையவில்லை. அற்புதமான ஒரேயொரு பவுண்டரியோடு, 5வது ஓவரில் ருபெல் ஹொசைன் ஓவரில் இன்சைட் எட்ஜ் ஆனார். மோசமான ஷார்ட் தேர்வு தான். ஆனால், அதிரடி வீரர்களுக்கு ஏது மோசமான ஷார்ட், நல்ல ஷார்ட்! ஸோ, இவருடைய விக்கெட்டை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அடுத்த ஆட்டத்திலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்... குறிப்பாக இதே போன்று ஒன்டவுனாக!.
ஆனால், அதே ஓவரில், ரெய்னாவுக்கு அவர்கள் கட்டிய கட்டம் அபாரமானது எனலாம். 5.5 வது ஓவரில் ரெய்னா சற்றும் எதிர்பார்க்காத வகையில் 'லெக் கல்லி' திசையில் ஒரு பீல்டரை நிறுத்தியது வங்கதேசம். ரெய்னாவை ஃபிளிக் செய்ய வைத்து தூக்குவதே அவர்கள் நோக்கம். இதை ரெய்னாவும் கவனிக்கவில்லை. எதிர்பார்த்தது போன்று, ரெய்னாவை ஃபிளிக் செய்ய வைக்கும் வகையில் ருபெல் பந்து வீசினார். ரெய்னாவும், 'இந்தா புடிச்சிக்கோ' என்று கெஸ் செய்தபடி கேட்ச் கொடுக்க, பந்தின் வேகம் காரணமாக பீல்டர் அந்த கேட்சை டிராப் செய்ய, அப்போது தான் ரெய்னாவுக்கு தம்மைச் சுற்றி வைக்கப்பட்ட செக்கே விளங்கியது. சற்றே ஆடிப்போனார் ரெய்னா.
இதன் பின்னும், இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தும் விதமாகவே வங்கதேசம் பந்துவீசியது. இறுதியில், தவான் 55 ரன்கள் விளாச, ரெய்னா 28, மனீஷ் பாண்டே 27 என்று கணிசமாக பங்களிக்க, 18.4வது ஓவரில் வென்றது இந்திய அணி.
முழு பலம் பொருந்திய வங்கதேச அணி, இரண்டாம் தர இந்திய அணியுடன் தோற்றிருப்பது சற்று ஆச்சர்யமான விஷயமே. ஆக மொத்தம், இந்தப் போட்டி அதிக சுவாரஸ்யம் இல்லாத ஒரு போட்டியாகவே காணப்பட்டது. இந்தியாவுக்கு பிரஷர் என்று ஒன்றுமில்லை. அதேசமயம், பல கேட்ச்களை நழுவவிட்டது, சற்று மந்தமான பேட்டிங் என இன்னும் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.
ஒட்டுமொத்தமாக, இலங்கையுடன் தோற்ற பின் எழுச்சி பெற்று பெற்ற வெற்றியாக இதை கருத முடியவில்லை.
கிரிக்கெட் குறள்:
கற்றலிலும் கற்காமல் கற்கண்டுஉண்டு கை
கழுவாமல் கையாண்டு வெற்றி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.