எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பைக்கு தகுதிப் பெற்ற இந்திய கால்பந்து அணி!

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய கால்பந்து அணி தகுதிப் பெற்றுள்ளது

ஐக்கிய அமீரகத்தில் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2019-ல் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. மூன்றாம் சுற்று தகுதி போட்டிகளின் ‘ஏ’ பிரிவில் இந்தியா, கிர்கிஸ்தான், மக்காவ், மியான்மர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.

இந்திய அணி, ஏற்கனவே விளையாடிய முதல் மூன்று ‘முதல் லெக்’ போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று, பெங்களூரில் நடைபெற்ற ‘இரண்டாம் லெக்’ போட்டியில் இந்திய அணி, மக்காவ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய அணியினரே முற்றிலும் ஆதிக்கம் செலுத்தினர்.

இந்திய அணி தரப்பில் போர்கஸ் (28-வது நிமிடம்), சுனில் செத்ரி (60-வது நிமிடம்) மற்றும் ஜேஜே (90+2-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மக்காவ் அணியின் ஹோ மேன் ஒரு சேம் சைடு கோல் அடித்தார். மக்காவ் அணியின் நிக்கி ஒரு கோல் அடித்தார். இதனால், இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து 2019-ம் ஆண்டு துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்தியா ஆசிய கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவது இது நான்காவது முறையாகும். முன்னதாக கடந்த 1964, 1984 மற்றும் அதற்கு பின் 27 ஆண்டுகள் கழித்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளுக்கு இந்திய அணி தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் ஆசிய கோப்பைக்கு இந்திய கால்பந்து அணி தகுதிப் பெற்றுள்ளதால், இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய வீரர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close