கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொல்லி அடித்து இந்தியாவை வென்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா நிர்ணயித்த 281 ரன்கள் இலக்கை, வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றிகரமாக சேஸிங் செய்தது நியூசிலாந்து.
இந்தநிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் நாளை (அக்.,25) நடக்கிறது. தொடரை இழக்காமல் இருக்க, நாளைய போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது.
இரு அணிகளும் நாளை மோதுவது 100-வது போட்டியாகும். இதுவரை நடந்த 99 ஆட்டத்தில் இந்தியா 49-ல், நியூசிலாந்து 44-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி ‘டை’ஆனது. 5 ஆட்டத்தில் முடிவு இல்லை. நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
பொதுவாக, இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என்றாலே, உலகின் எந்த அணிகளுக்கும் டேஞ்சர் தான். ஏனெனில், முதல் போட்டியில் தோற்றால், அடுத்த இரண்டு போட்டிகளையும் மிகவும் நெருக்கடியோடு ஆட வேண்டியதிருக்கும். அதேசமயம், முதல் போட்டியை வெல்லும் அணி, மனரீதியாக ஸ்ட்ராங்காக இருக்கும். ஏனெனில், அடுத்த இரண்டு போட்டிகளில் ஏதேனும், ஒன்றை ஜெயித்தால் கூட போதும். தொடரை வென்றுவிடலாம்.
ஆனால், கோலி தலைமையிலான இந்திய அணியை முதல் போட்டியில் சாய்த்து, சொன்னதை செய்துக் காட்டியுள்ளது நியூசி., அணி. அதாவது, இத்தொடர் ஆரம்பிக்கும் முன்னரே, நியூசிலாந்து வீரர்கள் ஒரேயொரு ஸ்ட்ராடஜியை மட்டுமே ஃபாலோ செய்தனர். இந்திய அணியின் ஸ்பின் பவுலிங்கில் ரன்கள் சேர்ப்பது தான் அந்த ஸ்ட்ராடஜி.
இந்திய அணியின் ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு விட்டால், இந்தியாவை வீழ்த்துவது எளிது என்று அவர்கள் கணித்து இருந்தனர். இதனை, நியூசி., வீரர் டாம் லாதம் கூட வெளிப்படையாக தெரிவித்தார். முதல் போட்டியில் சதம்(103*) விளாசியவர் தான் டாம் லாதம்.
அன்றைய போட்டியில் பவுல் செய்த இந்திய ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 64 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும், சாஹல் 10 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து, விக்கெட்டே வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டதும் இதற்கு சான்று.
ஆக, அவர்கள் நினைத்தது போலவே, இந்திய ஸ்பின்னர்களை திறம்பட கையாண்டு வெற்றியும் பெற்றுவிட்டனர்.
இதனால், நாளை நடைபெறவுள்ள 2-வது ஒருநாள் போட்டியில், நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்குகிறது. ஸ்பின் பவுலிங்கை கண்டு அஞ்சாமல் ஆடும் நியூசி., வீரர்களை, அதே ஸ்பின் கொண்டு அச்சுறுத்திவிட்டால் போதும். அவர்களை எளிதில் வீழ்த்திவிடலாம்.
கோலி இதை நன்கு உணர்ந்திருப்பார் என்று நம்பலாம். ஃபாஸ்ட் பவுலிங்கை பொறுத்தவரை, பும்ரா இன்னும் தனது கன்சிஸ்டன்சியை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், கேதர் ஜாதவின் பவுலிங்கையும் விராட் பயன்படுத்திக் கொள்வது அவசியம். முதல் போட்டியில் ராஸ் டெய்லர், டாம் லாதம் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல், இந்திய பவுலர்கள் தடுமாறிய போது, கோலி ஜாதவை பயன்படுத்தி இருக்கலாம். பவுலிங்கில் சில வேரியேஷன்களை ஜாதவ் தன் வசம் வைத்துள்ளார். இதனால், நிச்சயம் அணிக்கு இக்கட்டான நிலையில் அவர் கை கொடுபார் என நம்பலாம்.
அக்ரெஸிவான கேப்டன் கோலி, நிச்சயம் நாளைய போட்டியை கைநழுவவிடமாட்டார் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.