களத்தில் விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம், அவர் மீதான தவறுதலான பார்வையை ஏற்படுத்திவிடுகிறதே தவிர, களத்திற்கு வெளியே அவர் ஒரு சிறந்த மனிதர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலா இந்திய அணி தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஓருநாள் போட்டிகள் மற்றும் 1 இருபது ஓவர் போட்டி உள்ளிட்ட தொடர்களில் விளையாடுகிறது.
இந்தியா-இலங்கை அணிகளிடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றிவாகை சூடியது. இந்திய அணி விராட் கோலி தலைமையில் தற்போது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், கருத்து தெரிவித்துள்ளார். களத்தில் விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம், அவர் மீதான தவறுதலான பார்வையை ஏற்படுத்திவிடுகிறதே தவிர, களத்திற்கு வெளியே அவர் ஒரு சிறந்த மனிதர் என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கா புனே வந்திருந்தார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மைக்கேல் கிளார்க் கூறும்போது: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, ஆஸ்திரேலியாவில் அதிக ரசிகர்கள் இல்லை என்று கூறப்படுவதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். ஆஸ்திரேலிய வீரர்களைப் போன்ற திறனை விராட் கோலி பெற்றிருப்பதாகவே நான் கருதுகிறேன்.
விராட் கோலியைப்பற்றி உண்மையாகவே சொல்ல வேண்டுமானால், அவர் களத்தில் விளையாடுவது சவால் விடுக்கும் வகையில் இருப்பதோடு, எதிரணிக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார். ஆனாலும், விளையாட்டிற்கு அப்பாற்பட்டு அவரை பார்த்தோமேயானால், அவர் ஒரு மென்மையான மனிதர். விராட் கோலி களத்தில் போட்டி மனப்பான்மையுடன் நடந்து கொள்வதை மட்டுமே நினைத்து, அவரின் குணத்தை கணிப்பது என்பது தவறானது.
ஆஸ்திரேலிய ஊடகங்கள் எவ்வாறு விராட் கோலியை சித்தரிக்கிறது என்பது குறித்து மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவிக்கும்போது: என்னதான் இருந்தாலும், விராட் கோலியைப் பாராட்டும் வகையில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுதிவிடப்போவதில்லை. ஆஸ்திரேலிய ஊடகங்கள் விராட் கோலி குறித்து எதிர்மறையான செய்திகளை வெளிவிடவே விரும்புகின்றன. ஆனாலும், விராட் கோலியுடன் எனக்கு சிறந்த உறவு உள்ளது. அவர் மரியாதைக்குரியவர் என்றே நான் மதிப்பிடுகிறேன் என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்தார்.