உலக தடகள போட்டிகள் இங்கிலாந்தின் லண்டன் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது. உலகின் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் இந்த போட்டிகளுடன் விடை பெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பேராவல் சூழ்ந்துள்ளது.
அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட மொத்தம் 205 நாடுகள் பங்கேற்கும் 16-வது உலக தடகள போட்டிகள் இங்கிலாந்தின் லண்டன் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதில், மொத்தம் 24 போட்டிகள் இடம் பெற்றுள்ளன. இன்று தொடங்கும் இந்த போட்டிகள் வருகிற 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியா சார்பில் 25 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டியில் இந்தியா இதுவரை ஒரே ஒரு பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. 2003-ஆம் ஆண்டு பாரீசில் நடந்த உலக தடகள போட்டிகளில் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த முறை 19 வயதான நீரஜ் சோப்ரா மட்டுமே நம்பிக்கை வீரராக உள்ளார். உலக ஜூனியர் போட்டியில் 86.48 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து அவர் சாதனை படைத்துள்ளார்.
உலக தடகள போட்டிகள் இந்த முறை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுதியுள்ளதற்கு முக்கிய காரணம் உலகின் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான உசேன் போல்ட் உலக தடகளத்தில் இதுவரை 11 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். பல்வேறு சாதானைகளை படைத்துள்ள உசேன் போல்ட், இப்போட்டியுடன் விடை பெறுகிறார். அவர் கலந்து கொள்ளும் கடைசி சர்வதேச போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பேராவல் சூழ்ந்துள்ளது.
குறுகிய தூர ஓட்டங்களில் அசைக்க முடியாதவராக வலம் வரும் உசேன் போல்ட், 100 மீட்டர் தகுதிப் போட்டியில் இன்று களமிறங்குகிறார். இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்று விட்டால், உலகின் அதிவேக வீரர் யார் என்பதை தீர்மானிக்கும் நாளைய இறுதிப் போட்டியில் அவர் களமிறங்குவார்.