இறுதிப் போட்டியில் வெண்கலம் வென்ற உசேன் போல்ட்: ஏமாற்றத்தில் ரசிகர்கள்

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தனது ரசிகர்களை உசேன் போல்ட் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தனது ரசிகர்களை உசேன் போல்ட் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட மொத்தம் 205 நாடுகள் பங்கேற்கும் 16-வது உலக தடகள போட்டிகள் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 24 போட்டிகள் இடம் பெற்றுள்ளன. வருகிற 13-ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளது.

100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட், நடப்பாண்டு தடகள தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால், அவர் பங்கேற்ற 100 மீட்டர் ஓட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இறுதிப் போட்டி என்பதால் உசேன் போல்ட் நிச்சயம் தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்வார் என அவரது ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்போடு இருந்தனர்.

குறுகிய தூர ஓட்டங்களில் அசைக்க முடியாதவராக வலம் வந்த உசேன் போல்ட், உலக தடகள சாம்பியன்ஷிப் 2017 தொடரின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை வென்றார்.இப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் கட்லின் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெண்கலம் வென்றதால் உசேன் போல்ட் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

உலக தடகள சாம்பியன்ஷிப் 2017 தொடரில், இந்தியா சார்பில் 25 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டியில் இந்தியா இதுவரை ஒரே ஒரு பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. 2003-ஆம் ஆண்டு பாரீசில் நடந்த உலக தடகள போட்டிகளில் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த முறை 19 வயதான நீரஜ் சோப்ரா மட்டுமே நம்பிக்கை வீரராக உள்ளார். உலக ஜூனியர் போட்டியில் 86.48 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து அவர் சாதனை படைத்துள்ளார்.

×Close
×Close