சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் லீக் தொடர்களை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி மட்டும் இருந்த நேரத்தில், டி20 வருகை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாளடைவில் ரசிகர்கள் ரசனையானது டி20 பக்கம் திரும்பிவிட்டது. இதனால், டெஸ்ட் போட்டிகளின் மீது ரசிகர்களின் கவனைத்தை ஈர்க்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை மேற்கொண்டு வந்தது. இதற்காக, சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி லீக் ஆகியவற்றை நடத்த ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் நடைபெற்ற கூட்டத்தில், உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் லீக் ஆகிவற்றை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்லில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) ஒப்புதல் வழங்கியுள்ளது.இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் இந்த, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கவுள்ளது.
2019 முதல் 2021 வரை இரண்டு ஆண்டு காலகட்டத்தில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில், தரவரிசையில் டாப்-9 இடத்தில் உள்ள அணிகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகள் உள்நாட்டில் 3 தொடர் மற்றும் வெளிநாட்டில் 3 தொடர் என மொத்தம் 6 தொடர்களில் பங்கேற்கும். பின்னர், டாப் 2 அணிகள் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஒரு தொடரின் போது 2 போட்டிகள் இருக்கும் என்றும், 5 போட்டிகள் வரை அதிகரிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், போட்டிகளுக்கான புள்ளிகள், மற்றும் அது தொடர்பான கூடுதல் விவரங்கள் போன்றவை வெளியிடப்படவில்லை.
ஒருநாள் கிரிக்கெட் லீக்கைப் பொறுத்தவரையில், டாப் 13 அணிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21 காலகட்டத்தில் தொடங்கும் இந்த ஒருநாள் கிரிக்கெட் லீக், இரண்டு ஆண்டுகள் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் தலா 8 ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும். இப்போட்டி தொடரானது 2023-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதான தொடராக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.