T20 World Cup: indian cricket team Tamil News: உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன.
இந்த தொடருக்காக இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் தரையிறங்கியுள்ள நிலையில், தற்போது அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இன்று பெர்த்தில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி தரப்பில் சூரியகுமார் யாதவ் 52 ரன்கள் எடுத்தார். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதன் பிறகு பிரிஸ்பேனுக்குச் செல்லும் இந்திய அணி அங்கு முறையே அக்டோபர் 17 மற்றும் அக்டோபர் 19 ஆம் தேதிகளில் தி கபாவில் அதிகாரப்பூர்வ டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்
தொடர்ந்து இந்திய அணி அதன் முதல் லீக் போட்டியில் வருகிற 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது. வழக்கம் போல் இந்த போட்டிக்கு இருநாட்டு மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்திய அணியின் துருப்புச் சீட்டுகள் - எதிரணிக்கு மிரட்டல் விடும் டாப் 3 வீரர்கள்
ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் விலகி இருக்கிறார். இதனால், அவருக்கு பதில் யார் களமிறங்குவார் என்று தற்போதுவரை பிசிசிஐ தெரிவிக்கவில்லை.
இந்திய அணியின் துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார். ஆசிய கோப்பை மற்றும் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்னாள் கேப்டன் கோலியும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார். பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்க சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோரும், ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுழலில் கலக்க ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல் போன்றோரும், வேகப் பந்துவீச்சிற்கு புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக இடம்பிடித்துள்ளனர். இந்த வீரர்களில் துருப்புச் சீட்டுகளாகவும், எதிரணிக்கு மிரட்டல் விடுக்கும் வீரர்களாகவும் இருக்கும் டாப் 3 வீரர்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
விராட் கோலி
எதிர்வரும் டி-20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விராட் கோலி ஒன்-டவுன் பேட்ஸ்மேனாக களமாடுவார். சமீபத்தில் நடந்த முடிந்த ஆசிய கோப்பை தொடரில் கோலி தனது ஃபார்மை மீட்டெடுத்து இருந்தார். குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் தனது 71வது சர்வதேச சதத்தையும், முதலாவது டி-20 சதத்தையும் பதிவு செய்து அசத்தி இருந்தார்.
இதேபோல், ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் சிறப்பாக விளையாடி இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டி-20 ஆட்டங்களில் 76 ரன்கள் குவித்த கோலி, ஒரு போட்டியில் 61 ரன்கள் எடுத்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, ஒரு போட்டியில் ஆட்டமிழக்காமல் 49 ரன்களுடன் 2 ஆட்டங்களில் அரைசதம் விளாசி 52 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார் கோலி.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு மிடில்-ஆர்டரில் வலு சேர்க்கும் பேட்ஸ்மேனாக இருப்பார். அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் நொறுக்கி அள்ளும் அவரது எக்ஸ்பேக்டர் பேட்டிங் இந்திய அணிக்கு கூடுதல் பலம் தரும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்களில் 59.50 சராசரியிலும் 195+ ஸ்ட்ரைக் ரேட்டிலும் விளையாடி இருந்த அவர் 119 ரன்கள் எடுத்திருந்தார். இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 3 ஆட்டங்களில் 115 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
ஹர்திக் பாண்டியா
இந்திய அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்து வரும் ஹர்திக் பாண்டியா அணியின் மிடில் ஆர்டரில் வலு சேர்க்கும் மற்றொரு பேட்ஸ்மேனாக இருப்பார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டி-20 ஆட்டங்களில் ஒரு அரை சதத்துடன் 105 ரன்கள் எடுத்து இருந்த அவர் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. பிறகு, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
பாண்டியா தனது ஃபார்மை மீட்டெடுத்து இந்திய அணிக்கு திரும்பியது முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது அற்புதமான பேட்டிங் ஃபார்ம் இந்திய மிடில்-ஆடருக்கு நல்ல பலம் சேர்க்கும். அவரின் விக்கெட் வீழ்த்தும் திறனும் இந்திய அணிக்கு உதவும் என்பதால், அவர் தவிர்க்க முடியதா வீரர்களில் ஒருவராக இருக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.