ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்கள் விராட் கோலி, பும்ரா ஆகியோர் முதலிடத்தில் நீடிக்கின்றனர். இந்திய அணி 5-வது இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசசிசி) டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய அணி நியூசிலாந்து அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதனால், பாகிஸ்தானுக்கு லக் அடித்துள்ளது. ஆம், நியூசிலாந்து அணி தனது முதலிடத்தை தற்போது பாகிஸ்தானிடம் பறிகொடுத்துள்ளது.
இந்திய அணி 119 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் இடையே தசம புள்ளிகளே வித்தியாசம் உள்ளது. இதேபோல நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் தலா 120 புள்ளிகளுடன் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளன.
டி20 அணிகள் தரவரிசை
- பாகிஸ்தான் (124)
- நியூசிலாந்து(120)
- வெஸ்ட் இண்டீஸ்(120)
- இங்கிலாந்து(119)
- இந்தியா(119)
பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி 104 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் மேலும் 13 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ள விராட்கோலி, 824 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
டி20 பேட்டிங் தரவரிசை
- இந்தியாவின் விராட் கோலி (824)
- ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் (784)
- வெஸ்ட் இண்டீஸின் எல்வின் லெவிஸ் (780)
- நியூசிலாந்தின் வில்லியம்சன் (716)
- ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் (700)
டி20 பவுலிங் தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா முதலிடத்தில் நீடிக்கிறார்.
- இந்தியாவின் பும்ரா (724)
- பாகிஸ்தானின் இமாத் வாசிம் (719)
- ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (717)
- தென் ஆப்ரிக்காவின் சாமுயேல் பத்ரி (694)
- தென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாகிர் (691)
மற்ற இந்திய பந்துவீச்சாளர்களும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி புவனேஷ் குமார் இரண்டு இடங்கள் முன்னேறி 26-வது இடத்திலும், யுவேந்திர சாஹல் 22 இடங்கள் முன்னேறி 30-வது இடத்திலும் உள்ளனர்.