ICC U19 World Cup இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா. இதன் மூலமாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ICC U19 World Cup உலகம் முழுவதும் இளம் கிரிக்கெட் வீரர்களை உத்வேகப்படுத்தும் போட்டியாக 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைந்திருக்கிறது. 2018-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. கால் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வென்ற இந்தியா, அரை இறுதியில் நுழைந்தது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் இன்று இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. கிறிஸ்ட்சர்ச்சில் இந்திய நேரப்படி இன்று (30-ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்திய கேப்டன் பிரித்விஷா ‘டாஸ்’ ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய கேப்டன் பிரித்விஷாவும், மஞ்சோத் கல்ராவும் அபாரமான தொடக்கத்தை கொடுத்தனர். 15.3 ஓவர்களில் 89 ரன்கள் சேர்த்த நிலையில் பிரித்விஷா (41 ரன்கள்) ரன் அவுட் ஆனார். மஞ்சோத் கல்ரா 47 ரன்களில் அவுட் ஆனபோதும், ‘ஒன் டவுன்’-ல் இறங்கிய ஷூப்மான் கில் மொத்த சுமையையும் தனது முதுகில் ஏற்றிக்கொண்டார்.
மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்தபோதும், ஷூப்மான் கில் தனி ஆளாக ரன்களை குவித்துக் கொண்டிருந்தார். விக்கெட் கீப்பர் ஹர்விக் தேசாய் (20 ரன்கள்), அனுக்குல் சுதாகர் ராய் (33 ரன்கள்) ஆகிய இருவர் மட்டுமே அவருக்கு ஓரளவு துணையாக இருந்தனர்.
ஷூப்மான் கில் இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்று 102 ரன்கள் (94 பந்துகள்) குவித்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். 74 ரன்களை களத்தில் ஓடியே அவர் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அவரது கடின உழைப்பு கலந்த பொறுப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் இளம் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை சேர்த்தது.
பின்னர் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தானை, இந்திய பந்து வீச்சாளர்கள் நிலைகுலைய வைத்தனர். வெறும் 29.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் இளம் அணி, 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடி வென்றது இந்தியா.
பாகிஸ்தான் தரப்பில் விக்கெட் கீப்பர் ரோகால் நசிர் (18 ரன்கள்), சாத் கான் (15 ரன்கள்), முகம்மது மூசா (அவுட் இன்றி 11 ரன்கள்) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். இந்திய பந்து வீச்சாளர்களில் இஷான் போரெல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக ஷூப்மான் கில் அறிவிக்கப்பட்டார்.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலமாக 6-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்திருக்கிறது இளம் இந்தியா. இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.