/tamil-ie/media/media_files/uploads/2019/05/world-cup-trophy-1.jpg)
world cup 2019 schedule, J Anbazhagan MLA, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, cwc 2019
ஜெ.அன்பழகன், அதிரடியாக மேடைகளில் பேசும் அரசியல்வாதி மட்டுமல்ல... அபாரமான கிரிக்கெட் ரசிகர். திமுக எம்.எல்.ஏ. மற்றும் மாவட்டச் செயலாளரான அவர், உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கான வாய்ப்பு குறித்து இங்கு அலசுகிறார்...
2019 உலகக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. எல்லா அணிகளுமே முழுத் தயார் நிலையில் இங்கிலாந்துக்கு போய்ச் சேர்ந்திருக்கின்றன. மேட்ச் ஃபார்மட், நாக் அவுட் முறையில் இல்லை. பாயிண்ட்ஸ் அடிப்படையில்தான் இருக்கிறது. நான்கு மேட்ச் விளையாடி மூன்று ஜெயித்தால்தான் பாயிண்ட் டேபிளில் மேலே வர முடியும். எனவே ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம்.
இந்தியாவைப் பொறுத்தவரை பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். இந்திய அணியின் முக்கிய பலம் அது. ஃபாஸ்ட் பவுலிங்கும் நல்லா இருக்கு. உலக அளவில் சிறப்பான வீரர்களான பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் மீது நம்பிக்கை இருக்கு.
அதேசமயம், ஸ்பின்னர்களைப் பற்றி அவ்வளவு நம்பிக்கையாக பேச முடியவில்லை. சாஹல், குல்தீப் ஆகிய ரெண்டு பேருக்குமே இது ஃபர்ஸ்ட் வேர்ல்ட் கப். ஜடேஜா இருக்கிறார். இன்னும் அனுபவமுள்ள ஒரு ஸ்பின்னரை எடுத்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
குறிப்பாக ரவிசந்திரன் அஸ்வினை சேர்த்திருக்க வேண்டும். அவர் தமிழ்நாட்டுக்காரர் என்பதால் இதைச் சொல்லவில்லை. இங்கிலாந்து மண்ணில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். இப்போ இருக்கிற ஸ்பின்னர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் எல்லாப் போட்டிகளிலும் அவர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.
அஸ்வின் நல்ல விக்கெட் டேக்கர். இங்கிலாந்து மண்ணில் அவருக்கு அனுபவம் இருக்கிறது. இந்திய அணி அவரை மிஸ் பண்ணிவிட்டதாகத்தான் சொல்வேன்.
தவிர, இந்திய அணியில் இன்னும் கூடுதலாக ஆல்ரவுண்டர்களை சேர்த்திருக்கலாம். இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர் என ரெண்டு ஆல்ரவுண்டர்கள் இருக்கிறாங்க. ஆனா பிளேயிங் லெவன்னு பார்த்தா, ரெண்டு பேருல ஒருத்தருக்குத்தான் இடம் கிடைக்குது. அது இல்லாம மூணு, நாலு ஆல்ரவுண்டர்கள் வேண்டும்.
கபில்தேவ் மாதிரியான ஆல்ரவுண்டர் தேவை. ஹர்திக் பாண்ட்யாவை அப்படிச் சொல்கிறார்கள். ஆனா சில நேரங்களில் தொடர்ச்சியா சொதப்பிடுறாரு. இந்த வேர்ல்ட் கப்பில் அவர் ஆடுறத வச்சுத்தான், இன்னொரு கபில்தேவா? என்பதை சொல்ல முடியும்.
1983 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கியமான காரணகர்த்தாக்கள் கபில்தேவ், பின்னி, மதன்லால், மொகிந்தர் அமர்நாத். இவங்க எல்லாருமே ஆல்ரவுண்டர்கள். ஸ்பின்னரா, கீர்த்தி ஆசாத் இருந்தார். அவரும் 10 ஓவர் போட்டார். பேட்டிங்கும் செய்வார். பல்வீந்தர் சந்து மட்டும்தான் பேட்டிங் நல்லா பண்ணமாட்டார். மற்ற எல்லாருமே 20, 30 ரன்கள் அடிக்கக்கூடியவர்கள்.
ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா ஜொலித்தால், செமி ஃபைனல் வாய்ப்பு இந்தியாவுக்கு பிரகாசம் ஆகும். செமி ஃபைனலில் யாருடன் மோதுகிறோம் என்பதைப் பொறுத்து, இறுதிப் போட்டி வாய்ப்பு இருக்கும்.
இன்று இருக்கிற டீம்களில் பலமான அணியாக இங்கிலாந்தையே நான் மதிப்பிடுகிறேன். சமீப காலமாக 400 ரன்களையெல்லாம் சுலபமா அடிக்கிறாங்க. சொந்த மண் என்பதும், அவர்களுக்கு சாதகம். இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள், ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவருமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்.
தவிர, நல்ல ஹிட்டர்களாகவும் இருக்கிறார்கள். கொஞ்ச பந்துகளில் அதிக ரன்களை குவிக்கிறார்கள். மிடில் ஆர்டரில் வருகிற மொயின் அலி அதிரடியாக ஆடுகிறவர் மட்டுமல்ல, ஒன்றிரண்டு விக்கெட்டுகளையும் எடுக்கக்கூடியவர். கேப்டன் மோர்கன் பெரும்பாலான மேட்ச்களில் நல்லாவே விளையாடுகிறார்.
நமக்கு விராட் கோலி மாதிரி, அவங்களுக்கு ஜோ ரூட் இருக்கிறார். இங்கிலாந்து அணியில் ஓப்பனர்ஸ் முதல், அப் டு லெவன்... எல்லோருமே நல்லா செட் ஆகியிருக்காங்க.
அடுத்தபடியா, ஆஸ்திரேலியாவின் பேட்டிங், பந்துவீச்சு ரெண்டுமே ஸ்ட்ராங். ஓப்பனர் வார்னர், மிடில் ஆர்டரில் ஸ்மித் ரெண்டு பேருமே திரும்பியிருப்பது பெரிய பலம். பந்து வீச்சாளர்களும் நல்லாவே பெர்ஃபார்ம் பண்றாங்க. எனவே இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் டாப் 3-க்கு வருவாங்கன்னு நினைக்கிறேன்.
நான்காவது இடத்திற்கு ஆப்கானிஸ்தான் மாதிரி புதுசா ஒரு அணி வர வாய்ப்பு இருக்கு. ஆப்கானிஸ்தானை குறைச்சு மதிப்பிட முடியாது. ரஷித்கான் மாதிரி தரமான ஸ்பின்னர்களும், அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய ஹிட்டர்களும் இருக்காங்க.
வங்கதேசமும் டேஞ்சரஸ் டீம்தான். பாகிஸ்தான் அணியில் பந்து வீச்சு, பேட்டிங் இருந்தாலும், பல போட்டிகளில் சோபிக்கவில்லை. உலகக் கோப்பை போட்டியில் இதுவரை இந்தியாவுடன் எல்லா ஆட்டத்திலும் தோத்திருக்காங்க. இப்போ சவால் விட்டுருக்காங்க. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அன்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்படும் அணி ஜெயிக்கும் என்பது உண்மைதான். ஆனாலும் பாகிஸ்தான் அணியில் வெற்றிக்கான கலவை இல்லை.
/tamil-ie/media/media_files/uploads/2019/05/j-anbazhagan-mla-1-300x195.jpg)
அண்மையில் இங்கிலாந்து டூரிலும் பாகிஸ்தான் எல்லாப் போட்டியிலும் தோற்றது. இங்கிலாந்து 400 ரன்கள் அடிச்சா, இவங்களால அடிக்க முடியல. இவங்க 350 ரன்கள் அடிச்சா, இங்கிலாந்து துரத்திப் பிடிச்சாங்க. ஆக, சேஸிங்கும் இல்லை, ரன் குவிப்பும் இல்லை.
நியூசிலாந்து மீதும் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. ட்ரெண்ட் போல்ட், டிம் சவுதி என அதே பழைய வீரர்களை அவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 400 ரன்களைத் தாண்டி குவித்தது. இதற்கு காரணம், பவுலர்களை மாற்றாமல் வைத்திருப்பதுதான்.
பவுலர்களின் பலவீனங்களை இன்று துல்லியமா தெரிஞ்சுகிறாங்க. கம்யூட்டர் மூலமா இதை கணிச்சுக் கொடுக்கிறதுதான் கோச்களின் வேலையா இருக்கு. இதையும் மீறி பந்து வீச்சு உத்திகளில் மாற்றுகிறவர்கள், ஜெயிக்க முடியும்.
ஒரு காலத்தில் 230, 250 ரன்களே பெரிய ஸ்கோர். இன்று 350 ரன்களையும் விரட்டி எடுக்கிறாங்க. இங்கிலாந்து பிட்ச்களில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். அது இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் சாதகமான அம்சம். எனவே நம்பிக்கையுடன் இருப்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.