கஜ புயலின் ஆக்ரோஷத்தால் ஆட்டம் கண்டிருக்கிறது டெல்டா மாவட்டங்கள். நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தாலும், பல கிராமங்களில் இன்னும் ஒரு அதிகாரி கூட உள்ளே செல்லவில்லை. மின் கம்பங்கள் சாய்ந்த நிலையிலேயே இன்னும் அகற்றப்படாமல் உள்ளன.
மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தன்னார்வலர்களும், சொந்த பந்தங்களும், நண்பர்களும் தான் உதவி செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து பல வண்டிகள் தினமும் டெல்டா மாவட்டங்களை நோக்கி நிவாரணப் பொருட்களுடன் சென்றுக் கொண்டிருக்கின்றன.
அதில், சில வாகனங்களை மக்கள் பாதி வழியில் மறித்து, தங்கள் ஊர்களுக்கு திருப்பிவிடும் அவலங்களும் அரங்கேறி வருகின்றது. இதனை குறை சொல்லவும் முடியாமல், மக்களை கட்டுப்படுத்தவும் முடியாமல் அரசு தவிக்கின்றது.
இந்த நிலையில், நேற்று சிட்னியில் நடந்த இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டியில், தமிழக ரசிகர்கள் 'சேவ் டெல்டா' எனும் பதாகைகளை ஏந்திக் காண்பித்தனர். இது தற்போது சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம், 1-1 என டி20 தொடரை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.