Australia Tour of India 2022 Tamil News: 7-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கவுள்ள இத்தொடரில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றன.
டி20 உலகக்கோப்பை - இந்திய அணி
முன்னதாக நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில் தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால், தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனால், எதிர் வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதில் இந்திய அணி கவனம் செலுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை கடந்த திங்கள் கிழமை பிசிசிஐ அறிவித்தது.
அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியை கேப்டன் ரோகித் வழிநடத்துகிறார். அவருக்கு உறுதுணையாக செயல்பட கேஎல் ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங் வரிசையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா போன்றோரும், ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவும் உள்ளனர். விக்கெட் கீப்பர் வீரர்களாக ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளனர்.
ஆசிய கோப்பை தொடரில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர்கள் ஹர்ஷல் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா அணியில் இணைத்துள்ளனர். இவர்களுடன் புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் உள்ளனர். சுழலுக்கு ஆர் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்பு வீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய் மற்றும் தீபக் சாஹர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
இந்தியா vs ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடனான இருதரப்பு தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற 20 ஆம் முதல் 25 ஆம் தேதி வரையிலும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 11 ஆம் தேதி வரையிலும் நடக்கவுள்ளது. தற்போது இந்த தொடர்களுக்காக இந்திய அணி தயாராகி வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த அணியை கேப்டன் ஆரோன் பின்ச் வழிநடத்துகிறார். இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டி-20 ஆட்டம் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் வருகிற 20 ஆம் தேதி நடக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிரட்டல் பேட்ஸ்மேன்
சமீபத்தில் நடந்த முடிந்த ஆசிய கோப்பை தொடரில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்த முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, டி-20-யில் தனது முதல் சதத்தையும், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 71வது சர்வதேச சதத்தையும் பதிவு செய்தார். மேலும் அந்த ஆட்டத்தில் கோலி 61 பந்துகளில் 12 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 122 ரன்கள் குவித்து, தனது ஃபார்மையும் மீட்டெடுத்தார். தற்போது டி20 உலகக் கோப்பைக்காக தயராகி வரும் அவர், இதனிடையே நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் கோலி விளையாட இருக்கிறார்.
கோலியைப் பொறுத்தவரை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக எப்போதும் சிம்ம சொப்பனமாக திகழ்பவர். அந்த அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் மட்டும் தனது தரமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்த தவறுவதே இல்லை. குறிப்பாக சொந்த மண்ணில் நடக்கும் ஆட்டங்களில் அவர் ரன் வேட்டையே நடத்துவார்.
அந்த வகையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் கோலி 18 போட்டிகளில் 718 ரன்கள் எடுத்துள்ளார். இதுவே அந்த அணிக்கு எதிராக ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக அரைசதங்களை விளாசிய இந்திய வீரர்களில், 7 அரைசதங்கள் அடித்துள்ள கோலி முதல் வீராக இருக்கிறார். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்ஸர்களை விளாசி வீராகவும் கோலி (18 போட்டிகளில் 22 சிக்ஸர்கள்) இருக்கிறார்.
மறக்க முடியா ஆட்டம்
சர்வதேச டி-20 போட்டிகளில் பிப்ரவரி 1, 2012ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமடியா கோலி தனது இரண்டு ஆட்டங்களில் 22 மற்றும் 31 ரன்கள் எடுத்தார். ஆனால், அவரின் மறக்க முடியாத ஆட்டமாக 2016 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடந்த ஆட்டம் அமைந்துபோனது. அந்த ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த கோலி 55 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 90 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார். இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2016 டி20 உலக கோப்பை காலிறுதி ஆட்டத்தில் கோலி 82 ரன்கள் எடுத்தார். அவரின் அதிரடி ஆட்டம் இந்தியாவுக்கு வெற்றியை உறுதி செய்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் ரன்கள் பெரும்பாலானவை சேஸிங் செய்யும் போது வந்தவையாகும். எனவே, தற்போது வலுவான ஃபார்மில் இருக்கும் கோலியை ரன்கள் குவிக்காமல் நிறுத்துவது அந்த அணிக்கு கடினமான பணியாக இருக்கும். மேலும், சொந்த மண்ணில் களமாடும் அவரை எப்படி ஆஸ்திரேலியா சமாளிக்கப்போகிறது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் தனது ரன் வேட்டையை கோலி தொடர்வாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்தியா vs ஆஸ்திரேலியா: இரு அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திரா சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா அணி:
ஆரோன் பின்ச் (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் அகர், கேமரூன் கிரீன், டேனியல் சாம்ஸ், சீன் அபோட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் எல்லிசாம்பா, நாதன் எலிசாம்பா, நாதன்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.