பெண்கள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. 229 இலக்கை துரத்திய இந்திய அணியில், தொடக்க அதிரடி வீராங்கனை மந்தனா, ரன் கணக்கை தொடங்காமலேயே ஷ்ரப்சோல் பந்தில் போல்டானார். பின், 12-வது ஓவரில் பூனம் சிங்கிள் எடுக்க முயன்ற போது, எதிர்முனையில் இருந்த கேப்டன் மிதாலி ராஜ் மிக மெதுவாக ரன் ஓடினார். இதனால் தனது விக்கெட்டை அவர் பறிகொடுத்தார். எதிர் அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மிதாலி, தனது விக்கெட்டை மிகவும் மலிவாக இழந்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/a868-300x217.jpg)
சிறப்பாக ஆடி வந்த பூனம் ரவுத் 86 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுஷ்மா வெர்மா 0 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வேதா 35 ரன்னிலும், கோஸ்வாமி ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளைக் பறிகொடுத்தனர். இதனால், கடைசி வரை இந்திய அணியால் எழவே முடியவில்லை. முடிவில் இந்திய அணி, 48.4-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடி வந்த கேப்டன் டெய்லரை 45 ரன்களில் ஜூலன் கோஸ்வாமி வெளியேற்றினார். அதற்கு அடுத்த பந்திலேயே அருமையான யார்க்கரில் வில்சனை காலி செய்தார் கோஸ்வாமி. அரைசதம் அடித்து நிதானமாக ஆடிவந்த சிவரையும் 51 ரன்னில் கோஸ்வாமி எல்பிடபிள்யூ ஆக்கினார்.
இதையடுத்து, ஓரளவிற்கு போராடி வந்த ப்ரண்ட், 34 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். இறுதிக் கட்டத்தில் கன் 25 ரன்களும், மார்ஷ் 14 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். கடைசி 2 ஓவர்களில் மட்டும் அந்த அணி 30 ரன்கள் எடுத்தது.
பத்து ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் கோஸ்வாமி. மொத்தமாக பெண்கள் உலகக்கோப்பையில் 36 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். வரலாற்றில் இது மூன்றாவது மிகப்பெரிய சாதனையாகும்.
பதினொன்றாவது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதலாவது அரை இறுதியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. அந்த போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியது. இதனையடுத்து இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இன்று வென்றது மூலம், நான்காவது முறையாக இங்கிலாந்து பெண்கள் அணி உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
முழு ஸ்கோர்கார்டிற்கு இங்கே க்ளிக் செய்யவும்