இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி, டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு ஏழு மணிக்கு தொடங்க உள்ளது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-1 என போராடி வென்றது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு, நியூசிலாந்து கடும் சவாலாக விளங்குகிறது. அந்த அணியின், காலின் மன்ரோ, டாம் லாதம், ராஸ் டெய்ல்ர், கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர். இவர்கள் நால்வரும் சிறந்த வீரர்கள் என்பதைத் தாண்டி, இப்போது இவர்களது ஃபார்ம் பீக்கில் உள்ளது. இதுதான் இந்திய அணிக்கு மிகப் பெரிய தலைவலியாக உள்ளது.
அதேபோல், வரலாற்றில் இதுவரை நியூசிலாந்திற்கு எதிராக டி20 தொடரை இந்திய அணி வென்றதேயில்லை. இந்த மோசமான வரலாற்றை மாற்ற இந்திய அணி தீவிரமாக உள்ளது. ஒருநாள் தொடர் கடினமாக அமைந்ததால், டி20 தொடரை மிகுந்த கவனத்தோடு கோலி எதிர்கொள்வார் என்றே தெரிகிறது.
மனீஷ் பாண்டேவுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. பல போட்டிகளில் ஆட வாய்ப்புகள் கிடைத்தும் 10:2 என்ற ரேஷியோ கணக்கில் தான் அவரது செயல்பாடு உள்ளது. எனவே, அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் அல்லது தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு அளிக்கலாம். அது என்னமோ, இலங்கை தொடருக்குப் பிறகு, லோகேஷ் அணியில் சேர்க்கப்பட்டாலும், ஆடும் லெவனில் சேர்க்கப்படுவதேயில்லை. மற்றபடி ரோஹித், தவான், தோனி ஆகியோர் பொறுப்புடன் ஆடினால் இந்தியா வெற்றிப் பெறுவது உறுதி. ரன் மெஷின் கோலி பற்றி கவலைப்படத் தேவையில்லை.
வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ரா, புவனேஷ்குமார் அணிக்கு மிகப் பெரிய பிளஸ். இவர்களது டெத் பவுலிங் உலகின் எந்த அணிக்கும் சவால் அளிக்கும் வகையில் உள்ளது. அதேசமயம், மூத்த வீரர் ஆசிஷ் நெஹ்ரா இன்றைய போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்து இருந்தார்.
சொந்த மக்கள் முன்னிலையில், சொந்த மண்ணில் கடைசியாக கிரிக்கெட் விளையாடி, தனது நீண்ட கால கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார். இதற்காக இவரை இன்றைய போட்டியில் சேர்த்தால், பும்ரா, புவி ஆகிய இருவரில் ஒருவரை நீக்க வேண்டியிருக்கும்.
சமீபத்தில் பேட்டியளித்திருந்த இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத், "டெல்லியில் நடைபெறவுள்ள முதல் டி20 போட்டியில் நிச்சயம் நெஹ்ரா விளையாடுவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. குறிப்பிட்ட அந்த நாளில் தான் இது குறித்து முடிவு செய்யப்படும். இப்போதே அதுகுறித்து உறுதியளிக்க எங்களால் முடியாது" என்றிருந்தார்.
இதனால், இன்றைய போட்டியில் நெஹ்ராவின் கனவு நிறைவேற்றப்படுமா அல்லது நிரகாரிக்கப்படுமா என்பதை அறிய ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க - சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஆசிஷ் திவான்சிங் நெஹ்ரா!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.