India vs New Zealand {IND VS NZ } 3rd ODI Match, 3rd ODI Match highlights in tamil: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில், 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில், ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, கடந்த ஞாயிற்று கிழமை (நவம்பர் 27 ஆம் தேதி) ஹாமில்டனில் நடந்த 2வது ஒருநாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந்த நிலையில், தொடரை கைப்பற்றும் அணி எது? என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று புதன்கிழமை கிரிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியானது இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது.
நியூசிலாந்து பவுலிங்… இந்தியா பேட்டிங்…
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான்-சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி இந்தியாவுக்கு வலுவான தொடக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கில் 13 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக ஷிகர் தவான் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் உடன் ஜோடியில் இருந்த ரிஷப் பண்ட் 10 ரன்னிலும், அடுத்து வந்த சூரியகுமார் 6 ரன்னிலும் அவுட் ஆகினர். சூரியகுமார் 24.1 வது ஓவரில் அவுட் ஆகிய நிலையில், 59 பந்துகளில் 8 பவுண்டரிகளை விரட்டி 49 ரன்கள் எடுத்த ஷ்ரேயாஸ் அடுத்த ஓவரிலே (25.3) ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அரைசதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் தான் முடிந்தது.
இந்திய அணி 30 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. அப்போது ஹூடா (6) - சுந்தர் (9) ஜோடி களத்தில் இருந்தனர். இந்த ஜோடியில் ஹூடா 12 ரன்னிலும், அடுத்து வந்த தீபக் சாஹர் 12 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர்.
வாஷிங்டன் சுந்தருடன் களத்தில் இருந்த யுஸ்வேந்திர சாஹல் 8 ரன்னுடனும், ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு மிரட்டிய அர்ஷ்தீப் சிங் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 63 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் பறக்கவிட்ட வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து அணியின் ஸ்கோரை அவர் உயர்த்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 51 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த பந்திலே ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்திடம் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஆடம் மில்னே மற்றும் டேரில் மிட்செல் தலா 3 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளையும், லாக்கி பெர்குசன் மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 220 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை நியூசிலாந்து அணி துரத்திய நிலையில், மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது நியூசிலாந்து அணி 18 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து இருந்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் அரைசதம் அடித்த தொடக்க வீரர் ஃபின் ஆலன் 54 பந்துகளில் ஒரு சிக்ஸர் 8 பவுண்டரிகள் என 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் டெவோன் கான்வே 38 ரன்களுடனும், கேப்டன் கேன் வில்லியம்சன் பூஜ்ய ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர் மழையால், ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 20 ஓவர்கள் (அடுத்த 2 ஓவர்கள்) வீசப்பட முடியவில்லை. இதனால், ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் இருந்த நிலையில், அந்த அணி தொடரை கைப்பற்றியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil