Cricket Flashback : ரஜினி சொன்ன அதிசயம் இதுதான் – கடைசி ஓவரில் பவுலராக சாதித்த சேவாக்! கண்ணீர் விட்ட கங்குலி!

நம்ம தாதா சவுரவ் கங்குலியே நம்ப முடியாத வெற்றிக் களிப்பில் கண்ணீர் வடித்த போட்டி இது. 2002… சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் கொழும்புவில் மல்லுக்கட்ட தயாராகின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கங்குலி பேட்டிங்கை தேர்வு செய்ய, சேவாக் அதிரடியாக 59…

By: November 19, 2019, 6:47:53 PM

நம்ம தாதா சவுரவ் கங்குலியே நம்ப முடியாத வெற்றிக் களிப்பில் கண்ணீர் வடித்த போட்டி இது.

2002… சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் கொழும்புவில் மல்லுக்கட்ட தயாராகின.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கங்குலி பேட்டிங்கை தேர்வு செய்ய, சேவாக் அதிரடியாக 59 ரன்கள் எடுக்க, சச்சின் கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் பிலோ 30க்குள் வெளியேறிவிட்டனர். டிராவிட் 49, யுவராஜ் 62 என்ற கடைசிக் கட்ட புண்ணியத்தால் இந்தியா, 9 விக்கெட்டுகளுக்கு 261 ரன்கள் சேர்த்தது.

பிறகு, தென்னாப்பிரிக்கா ஸ்மித்தை 4 ரன்களில் இழந்தாலும், கிப்ஸ் – காலிஸ் அமைத்த பார்ட்னர்ஷிப், ‘டிவிக்குள் நுழைந்து நாமே பவுலிங் செஞ்சிடுவோமா!’ என்று ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்தது. அதிலும் கிப்ஸ் சதம் அடித்து, பேட்டை நம்பிக்கையுடன் உயர்த்திய போது, இந்திய ரசிகர்களை பார்த்து ‘ரைட்டு கிளம்பு’ என்பது போலவே இருந்தது.

மறுபக்கம் காலிஸ் சதத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்க, ரசிகர்களின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.

116 ரன்கள் எடுத்திருந்த கிப்ஸ், காயம் காரணமாக ரிட்டையர்டு ஹர்ட் ஆகி வெளியே சென்ற போது கூட, இந்தியாவின் பக்கம் வெற்றி மகள் ஒதுங்கவில்லை.

38.2வது ஓவரை வீசிய ஹர்பஜன் ஓவரில், ஜாண்டி ரோட்ஸ் ஃபிளிக் செய்த பந்தை, யுவராஜ் அட்டகாசமாக பிடிக்க, அந்த நொடியில் பிரசவித்தது நம்பிக்கை. தென்.ஆ., இப்போது 194/2.

பிறகு களமிறங்கிய டிப்பனர் 0 ரன்களில் அவுட்டாக, 194/3 என்றானது ஆட்டம். டேய் மணியா… விட்டுடாத என்று களத்தை கட்டுக்குள் கொண்டுவந்த கங்குலி ஆர்மி, அதன்பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.

பவுச்சர் 10 ரன்களில் அவுட்டாக, கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.

ஏற்கனவே, தான் உட்பட எட்டு பவுலர்களை பந்துவீச வைத்திருந்த கங்குலி, கடைசி ஓவரை நம்ம சேவாக் கைகளில் கொடுத்தார்.

91 ரன்களுடன் கெடா சைஸில் காலிஸும், லான்ஸ் க்ளூஸ்னரும் களத்தில் நின்றுக் கொண்டிருக்க, எப்படி இருந்திருக்கும் சேவாக்கிற்கு!?

முதல் பந்தில், லெக் சைடில் காலிஸ் ஒரு அபார சிக்ஸ் அடிக்க, ஏற்கனவே முட்டிக் கொண்டிருந்ததை அடக்க முடியாமல், நண்பன் பாத்ரூமை நோக்கி ஓடியது வரலாறு. ஆனால், அவன் வெளிவருவதற்குள்ளேயே இரண்டாவது பந்தில், டாப் எட்ஜ் ஆகி 97 ரன்களில் காலிஸ் அவுட்டாக, நண்பனை பாத்ரூமை விட்டு வெளியே வந்தால் மர்டர் என எச்சரித்து, நம்பிக்கையில்லாமல் கதவையும் பூட்டி வைக்க, அதற்குள் சேவாக் அடுத்தடுத்த பந்துகளை கன்டெய்ன் செய்து, கடைசி பந்தில் க்ளூஸ்னரையும் அவுட்டாக்க, 10 ரன்கள் வித்தியாசத்தில் நண்பனை பாத்ரூமில் இருந்து விடுவித்தது இந்தியா.

38.2வது ஓவரில் 194/2 என்றிருந்த தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 262 ரன்கள் எடுத்து வெல்ல முடியாமல், 6 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது என்றால் அது தான் ரஜினி சொன்ன அதிசயம்!


இந்த அதிசயத்தை நம்ப முடியாமல், கேப்டன் கங்குலி மைதானத்திலேயே கைகளால் முகத்தை மூடி ஆனந்தக் கண்ணீர் சிந்தியது இன்னமும் நம் நெஞ்சில்!!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Ind vs sa 2002 champions trophy semi final video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X