தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடர், நடந்து வரும் ஒருநாள் தொடர் என இதுவரை விளையாடிய ஒரு ஆட்டத்தில் கூட, 'ஹிட் மேன்' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடவில்லை. குறைந்தபட்சம், தன்னை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்து வந்ததற்கான குறைந்த பட்ச நியாயத்தைக் கூட அவர் செய்யவில்லை.
இன்று வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது ஒருநாள் போட்டியிலாவது அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்க, ரபாடா பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெறும் ஐந்து ரன்னில் வெளியேறினார் ரோஹித்.
கடந்த டிசம்பரில் நடந்த 'இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதம், அதே இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் சதம் என பிரித்து மேய்ந்த ரோஹித்தா இது?' என அனைவரும் நொந்து கொள்ளும்படி உள்ளது தென்னாப்பிரிக்காவில் அவரது செயல்பாடு.
ஒவ்வொரு முறையும் மும்பைக்காரரான ரோஹித் சொதப்பும் போது, கேப்டன் கோலி ஆதரவு கரம் நீட்டினாலும், இப்போது அவரே என்ன செய்வது என குழம்பி நிற்கும் அளவிற்கு ஆளாக்கியுள்ளார் ரோஹித்.
இத்தொடரில் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் அடித்த ரன்கள் - 11, 10, 10, 47.
ஒருநாள் போட்டிகளில் அடித்துள்ள ரன்கள் - 20, 15, 0, 5.
இந்த ஒருநாள் தொடரில் அவரது ஆவரேஜ் 10. ஒருநாள் போட்டிகளில், 2013ம் ஆண்டு இந்திய தொடக்க வீரராக ரோஹித் புரமோஷன் பெற்ற பிறகு, ஒருநாள் தொடர் ஒன்றில் அவரது மிக மோசமான ஆவரேஜ் இது தான்.
அது சரி! அந்த 'Auf Wiedersehen'-ன்னா என்னனு தானே கேட்குறீங்க...! அது ஜெர்மன் மொழி வார்த்தை. நமக்கு பிடித்த ஒருவரை விட்டு பிரியும் பொழுது, 'குட் பை... நாம் மீண்டும் சந்திப்போம்' என்று சொல்வதே அதன் பொருளாகும்.
தொடர் தடுமாற்றத்தால் திணறும் ரோஹித்திற்கு மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு கொடுத்துவிட்டு, அட்லீஸ்ட் டி20 தொடரிலாவது அவர் சிறப்பாக விளையாட அணி நிர்வாகம் முயற்சிக்க வேண்டும் என்பதே ரோஹித் ரசிகனின் விருப்பமாக இருக்க முடியும்.